

ஆம்பூர்: “நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதனுக்கு எதிராக மதுரையில் தேச விரோத சக்திகள் சோஷியல் மீடியா மூலம் மிரட்டல் விடுக்கும் வகையில் அவதூறு பரப்பி வருவதால், அவருக்கும், அவரது குடும்பத்துக்கும் மத்திய அரசு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என பாஜக நிர்வாகியும், நடிகையுமான கஸ்தூரி தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த பாஜக நிர்வாகி கஸ்தூரி, ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ‘‘இந்து - முஸ்லிம் நல்லிணக்கத்தோடு இருப்பதை ஆம்பூரில் நான் கண் கூடாக பார்த்தேன். தேவையில்லாமல் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்துவது திமுகதான்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அங்குள்ள இந்து - முஸ்லிம் மக்கள் இத்தனை ஆண்டு காலமாக ஒற்றுமையாக இருந்த நிலையில், தற்போது அரசியலுக்காக திமுக சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதியரசர் ஜி.எஸ்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பின் விவகாரம், ஒரு முறை அல்ல, பலமுறை இதுபோன்று நடந்துள்ளது. தமிழக அரசு இந்து பண்டிகைகள் மற்றும் இந்து கோயில்களுக்கு ஏதோ ஒரு வகையில் செயல்பாடுகளை எடுக்காமல் எதிர்வினை ஆற்றுகிறது.
நேர்மையாக எதற்கும் வளைந்து கொடுக்காத ஒரு நீதியரசரை தனிப்பட்ட முறையில் தாக்கும் திமுக அரசு மற்றும் அதன் கூட்டணி அரசுகள் தொடர்ந்து அவர் மீது அவதூறு பரப்பி வருவதன் மர்மம்தான் என்ன?
நீதியரசர் ஜி.எஸ்.சுவாமிநாதனுக்கு எதிராக மதுரையில் தேச விரோத சக்திகள் சோஷியல் மீடியா மூலம் மிரட்டல் விடுக்கும் வகையில், அவதூறு பரப்பி வருவதால் அவருக்கும், அவரது குடும்பத்துக்கும் மத்திய அரசு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தமிழக மக்கள் திமுக அரசின் மீது அதிருப்தியில் உள்ளனர். புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இயங்காதது குறித்து தவெக தலைவர் விஜய் எழுதி கொடுத்ததை பேசியுள்ளார். அவரைச் சொல்லி குற்றமில்லை; எழுதிக் கொடுத்தவர்கள் இன்னும் கொஞ்சம் தயாரித்துக் கொடுத்திருக்கலாம்.
புதுச்சேரி அரசு தற்போது ரேஷன் கடைகளில் வழங்கக் கூடிய பொருட்களுக்கு பதிலாக பணமாக கொடுத்து வருகிறது. அது அவருக்கு தெரியவில்லை. பட்டிமன்றம் போல் எழுதிக் கொடுத்ததை படித்து வருகிறார்.
தமிழகத்தில் எம்ஜிஆரை புகழ்ந்து பேசிதான் அனைவரும் அரசியல் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. அந்த வகையில் விஜய், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை தன்னுடன் ஒப்பிட்டுப் பேசுவது அவருடைய பெர்ஃபான்ஸாகவே நான் பார்க்கிறேன்.
புதுச்சேரியில் அதிமுக எம்ஜிஆர் காலத்தில் வெற்றி பெறுவதற்கு முன்பே திண்டுக்கல்லில் மாயதேவரை எம்ஜிஆர் வெற்றிப் பெறச் செய்தார். இந்த வரலாற்றை மறந்த விஜய், தற்போது ஈரோடு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தவெகவுக்கு வாய்ப்பு இருந்தும் ஏன் போட்டியிடவில்லை’’ என்றார் கஸ்தூரி