

சென்னை: நகராட்சி அதிகாரிகள் நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை ஆதாரப்பூர்வமாக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியும் முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேரு மீது எந்த நடவடிக்கை
யும் எடுக்கவில்லை என அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டினார்.
கடந்த திமுக ஆட்சியில், நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் நியமனத்துக்கு ரூ. 634 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், எனவே அது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது.
அதன் அடிப்படையில் கே.என். நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக்கோரி அதிமுக எம்பி ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை கடிதத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், தனது தரப்பு வாதங்களை கேட்காமல் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதால், இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக்கோரி கே.என்.நேரு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுதலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் கூறுகையில், ‘நகராட்சி அதிகாரிகள் நியமனத்தில் ரூ. 634 கோடி வரை லஞ்சம் பெற்று முறைகேடுகள் நடந்துள்ளதாக சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றம் சாட்டி அமலாக்கத்துறை முந்தைய திமுக ஆட்சியில் தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
ஆனால் முந்தைய திமுக அரசு, கே.என். நேரு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவரை பாதுகாத்துள்ளது. இதுதொடர்பாக இன்பதுரை தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க நேருவுக்கு நோட்டீஸ் பிறப்பித்து அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவகாசம் வழங்கவில்லை எனக்கூறி மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகள் நியமனத்தில் ரூ. 634 கோடி வரை ஊழல் நடந்துள்ளதை அமலாக்கத்துறையின் கடிதம் ஆதாரப்பூர்வமாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. எனவே அந்த உத்தரவை மறுஆய்வு செய்யும்படி கே.என்.நேரு தரப்பில் தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. அதை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என வாதிட்டார்.
நேரு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சித்தார்த் லுத்ரா, பி.எச்.அரவிந்த் பாண்டியன் ஆகியோர், ‘அந்த வழக்கில் நோட்டீஸ் பிறப்பித்து இருந்தாலும், இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்ற எங்களது தரப்பு வாதங்களை கேட்காமலேயே உயர் நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
மேலும் வழக்குப்பதிய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுஆய்வு செய்யும்படி முந்தைய ஆட்சியில் முடிவு எடுக்கப்பட்டு, தாக்கல் செய்யப்பட்ட மனுவை தற்போதைய அரசு வாபஸ் பெற எந்த அதிகாரமும் கிடையாது’ என வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி கே.என்.நேரு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.
மேலும் அதுவரை நேருவுக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்கில் எந்தவொரு மேல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை நீட்டித்து உத்தர விட்டுள்ளனர்.