

பழநி தேரோட்டம்
படம்: நா.தங்கரத்தினம்
திண்டுக்கல்: பழநி பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை (இன்று) மாலை கோலாகலமாக நடைபெற்றது. ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா’ முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 26-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 6-ம் நாளான நேற்று இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. அன்று இரவு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி மணக்கோலத்தில் வெள்ளித்தேரில் எழுந்தருளி, கிரிவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்துக்கு முன்னதாக இன்று (ஏப்.1) காலை 4.30 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தீர்த்தவாரிக்கு எழுந்தருளல், காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல் மற்றும் காலை 8 மணிக்கு தந்தப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
படம்: நா.தங்கரத்தினம்
காலை 11 மணிக்கு மேல் மிதுன லக்கினத்தில் சுவாமி தேரில் எழுந்தருளினார். அப்போது, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு மேல் விநாயகர், அஸ்திரத்தேவர் தேர்கள் முன்செல்ல வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தேரை கிரிவீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
அப்போது, ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா’ என பக்தர்கள் முழக்கமிட்டனர். தேரோட்ட நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், அறங்காவலர்கள் பங்கேற்றனர். தேர் நிலையை அடைந்தவுடன் இரவு 9 மணிக்கு சுவாமி தந்தப்பல்லக்கில் சுவாமி தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏப்.4-ம் தேதி காலை 9 மணிக்கு திருவூடல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.
கஸ்தூரி பங்கேற்கவில்லை:
தைப்பூசம், பங்குனி உத்திரம், சஷ்டி உள்ளிட்ட திருவிழாக்களில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலைச் சேர்ந்த யானை கஸ்தூரி பங்கேற்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் நெருக்கமான யானையாக கஸ்தூரி திகழ்கிறது. தேரோட்டத்தின்போது, கஸ்தூரி பக்தர்களுக்கு உதவியாக பின்னால் இருந்து தேரை தள்ளிக் கொண்டே செல்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஆனால், வயது முதிர்வு மற்றும் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததன் காரணமாக கஸ்தூரி தேரோட்டத்தில் பங்கேற்கவில்லை. திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் யானை கஸ்தூரியை தேடிப் பார்த்து, ஏமாற்றம் அடைந்தனர்.