“நாங்குநேரி சம்பவம் சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம்” - சீமான் கண்டனம்

சீமான் | கோப்புப்படம்
சீமான் | கோப்புப்படம்
Updated on
2 min read

சென்னை: ‘நாங்குநேரியில் போதை கும்பல் தாக்கியதில் இருவர் உயிரிழந்தது சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம். மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் கையாலாகாத்தனமே நடைபெற்றுள்ள இக்கொடூர குற்றத்திற்கு மூல காரணமாகும்.’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த கடம்போடு வாழ்வு கிராமத்தில் 9 பேர் கொண்ட போதை கும்பல் அப்பாவி பொதுமக்களைக் கொடூர ஆயுதங்களால் தாக்கிய துயர நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது. போதைக்கும்பலின் கண்மூடித்தனமான தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன், 7 பேர் படுகாயமடைந்த துயரச்செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பன்மடங்கு அதிகரித்துள்ள போதைப்பொருள் புழக்கத்தால் நாள்தோறும் நடைபெறும் படுகொலைகள், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது. போதைக்கும்பலின் ஈவு இரக்கமற்ற தாக்குதலில் கொலை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி சகோதரர் ஜான் மற்றும் வடமாநிலத் தொழிலாளர் இருவரின் குடும்பத்திற்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன். படுகாயமடைந்தவர்களுக்கு உரிய உயர் மருத்துவம் அளித்து தமிழ்நாடு அரசு உயிர் காக்க வேண்டும்.

இக்கொடூர கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட கும்பல் போதையிலிருந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் கையாலாகாத்தனமே நடைபெற்றுள்ள இக்கொடூர குற்றத்திற்கு மூல காரணமாகும்.

தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து படுகொலைகளும், வன்முறை நிகழ்வுகளும் முன்பகையால் திட்டமிட்டு நடப்பவை என்று காரணம் கற்பித்த திமுக அரசு, எந்தவித காரணமும் இன்றிப் போதைக்கும்பல் நடத்தியுள்ள கண்மூடித்தனமான இப்படுகொலைகளுக்கு என்ன பதில் கூறப்போகிறது?.

அண்மையில் தலைநகர் சென்னையில் பிஹார் தொழிலாளியின் குடும்பம் மொத்தமும் மதுபோதை கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்ட துயரம், நாங்குநேரியில் நடைபெற்றுள்ள இக்கொடூர நிகழ்வும் தமிழ்நாடு முழுவதுமே போதைப்பொருள் புழக்கத்தால் முற்றுமுழுதாக சீர்கெட்டுள்ளதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

நாட்டில் நடக்கும் அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படை காரணமாக உள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையைத்தான் திமுக அரசால் தடுக்க முடியவில்லை. குறைந்தபட்சம் அரசு நடத்தும் மதுக்கடைகளை மூடுவதில் திமுகவிற்கு என்ன தயக்கம்? நாட்டு மக்களின் பாதுகாப்பான நல்வாழ்வினை விடவும் அரசின் வருமானம்தான் திமுக அரசிற்கு முக்கியமானதா?

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும், போதைப்பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும், சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வேண்டுமென்று தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி போராடி வருகின்றது. ஆனால், ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, தற்போது தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தும் என்ற நம்பிக்கையை மக்கள் முற்று முழுதாக இழந்துவிட்டனர்.

கட்டுக்கடங்காது நடைபெறும் போதைப்பொருட்கள் விற்பனையும், அதன் காரணமாக நடைபெறும் கொடூர படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியம் மீதமிருக்கும் நாட்களில் இன்னும் எத்தனை உயிர்களை பலி கொள்ளப்போகிறதோ என்று மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்படுத்தாது, தமிழ்நாட்டை பாதுகாப்பற்ற மாநிலமாக மாற்றி நிறுத்தியுள்ள திமுக அரசிற்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இக்கொடிய குற்றத்தில் ஈடுபட்ட போதைக்கும்பலை தமிழ்நாடு காவல்துறை விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்

சீமான் | கோப்புப்படம்
நாங்குநேரி இரட்டை கொலை வழக்கில் 7 இளைஞர்கள் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in