

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் தவெக எம்எல்ஏ கார்த்திக்கை மிரட்டியதாக அளித்த புகாரின் பேரில் திமுக பேரூராட்சி கவுன்சிலரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் புளுகாண்டி கோயிலுக்கு செல்வதற்காக வாழைக்குளம் கண்மாயில் கரையை சரிப்படுத்தக் கடந்த 25-ம் தேதி கண்மாயில் இருந்து மண் அள்ளி கரையில் கொட்டும் பணியில் அப்பகுதி விவசாயிகள் சிலர் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு தவெக நிர்வாகிகளுடன் வந்த எம்எல்ஏ கார்த்திக், மண் அள்ளுவதற்கான அனுமதி குறித்து கேட்டார். அப்போது விவசாயிகளுக்கும் தவெகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
விவசாயிகளுக்கு ஆதரவாக மம்சாபுரம் பேரூராட்சி தலைவரின் கணவரும், கவுன்சிலருமான தங்கமாங்கனி அங்கு சென்ற போது, எம்எல்ஏ தரப்புடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில், எம்எல்ஏ மற்றும் தவெகவினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தவெக நிர்வாகி கார்த்திகேயன் புகார் அளித்தார். அதன்பேரில் தங்கமாங்கனியை போலீஸார் கைது செய்தனர். தங்கமாங்கனி, முன்னாள் எம்எல்ஏ தாமரைக்கனியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது