

திமுக பிரமுகர் கே.சி.ஆர்.குமார் | பெரம்பலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திமுக பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள்
பெரம்பலூர்: பெரம்பலூரில் விதிகளை மீறி கல்குவாரி, கிரஷரை இயக்கிதாக திமுக பிரமுகரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, தொண்டர்களும் உறவினர்களும் நள்ளிரவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூரில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பெரம்பலூரில் 10 கல்குவாரிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் சில கல்குவாரிகளுக்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்குவாரி உரிமையாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் விதிகளை மீறி மீண்டும் கல்குவாரிகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் கற்களை வெட்டி எடுத்து, கிரஷர்களுக்கு கொண்டு சென்று, கிராவல் மண்ணாக மாற்றி எடுத்து செல்வதாக கூறப்படுகிறது.
அதன்படி நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் அருகே எளம்பலூரில் உள்ள திமுக பிரமுகரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான கே.சி.ஆர்.குமாருக்கு (55) சொந்தமான கல்குவாரிகளில் இரவில் பொக்லைன் மூலம் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது. இதற்காக டாரஸ் லாரிகள் பயன்படுத்தப்பட்டு, கே.சி.ஆர்.குமாருக்கு சொந்தமான கிரஷருக்கு எடுத்து சென்று, கிராவல் மண்ணாக மாற்றி கடத்தப்பட்டது தெரியவந்தது.
இது குறித்த தகவலின் பேரில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் பெரம்பலூர் போலீஸார், நேற்று இரவு கல்குவாரி உரிமையாளர் கே.சி.ஆர்.குமார், பொக்லைன் ஆப்ரேட்டர் ராஜா ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் கைது சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரம்பலூர் திமுக பிரமுகர்கள், கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள், தொழிலாளர்கள், வழக்கறிஞர்கள் என 150-க்கும் அதிகமானவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஏடிஎஸ்பி பாரதிதாசன், டிஎஸ்பி சுரேஷ், இன்ஸ்பெக்டர் வேலுமணி ஆகியோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வழக்கறிஞர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்ற போலீஸார் உடனே கே.சி.ஆர்.குமார் மற்றும் ராஜா ஆகியோரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி, லோக்கல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி கே.சி.ஆர்.குமார், ராஜா ஆகியோரை சொந்த ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார். இச்சம்பவத்தால் நள்ளிரவு 1 மணி வரை பெரம்பலூர் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.