

சென்னை: “வெற்றி பெற்றதும் எங்கும் தங்காமல் உடனடியாக பனையூருக்கு வந்துவிட வேண்டும்” என்று தவெக வேட்பாளர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று முன்தினம் வெளியாகின.
பெரும்பாலான கணிப்புகள் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன. ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் மட்டும், தவெக 98 முதல் 120 இடங்களை கைப்பற்றி முதல் முயற்சியிலேயே ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.
இந்நிலையில், பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் அனைத்துத் தொகுதி வேட்பாளர்களுடனும் விஜய் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து தவெக வட்டாரங்கள் கூறியதாவது: வேட்பாளர்கள் பலர், வாக்கு சேகரிக்க சென்றபோது தாங்கள் சந்தித்த நெருக்கடிகள், வாக்குப்பதிவின்போது நடந்த மோதல்கள் குறித்து தெரிவித்தனர். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட விஜய், ‘கருத்துக்கணிப்புகளை புறம் தள்ளுங்கள்.
மக்கள் தீர்ப்பு நமக்கு சாதகமாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். நீங்களும் அதே நம்பிக்கையுடன் இருங்கள். அதேநேரத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது கடுகளவும் பிசகாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்த பிறகே கையெழுத்திட வேண்டும்’ என அறிவுறுத்தினார். மேலும், “வெற்றிச் சான்றிதழ் வாங்கிய கையோடு எங்கும் தங்கிவிடாதீர்கள்; வேறு யாருடைய அழைப்புக்கும் செவிசாய்க்க வேண்டாம்.
நேரடியாக பனையூர் அலுவலகத்துக்கு வாருங்கள். உங்களுக்காக நான் இங்கே காத்திருப்பேன்” என தெரிவித்தார், தேர்தல் முடிவுக்கு பிந்தைய ‘குதிரை பேர’ அரசியலை முன்கூட்டியே முறியடிக்க தயாராகிவிட்டார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கட்சியின் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் கூறும் போது, “எங்கள் தலைவர் அனைத்து வேட்பாளர்களுடனும் கலந்துரையாடி, வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டியது குறித்து அறிவுரை வழங்கியுள்ளார். அனைத்து வேட்பாளர்களும் இதில் பங்கேற்றனர்” என்றார்