பெரியார் அறிவுலக முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிய கோரி திமுக வழக்கு

சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
பெரியார் அறிவுலக முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிய கோரி திமுக வழக்கு
Updated on: 
1 min read

சென்னை: கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் இ.பரந்தாமன் சார்பில் வழக்கறிஞர் தாமோதரன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கோவை பெரியார் அறிவுலகத்துக்கு ரூ.50 கோடிக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த பெரியார் அறிவுலகம் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி துவக்கி வைக்கப்பட்டது.

புத்தகங்கள் பரிந்துரைக்காக 117 பேர் அடங்கிய புத்தக பரிந்துரைக் குழு அமைத்து கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிடப்பட்டது.

அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில், ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மோனிகா ரவி என்ற ஒரே எழுத்தாளரிடம் இருந்து 6 மாதங்களில் 162 புத்தகங்களும், லட்சுமி மோகன், தாமரை பன்னீர், தாமரை முரளி, ஜோதி ஹரிஹரன் ஆகிய எழுத்தாளர்களின் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த பெயரில் எழுத்தாளர்கள் இருக்கின்றனரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தப் புத்தகங்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

புத்தக பரிந்துரைக் குழுவில் உறுப்பினராக இருந்த பெருமாள் முருகன், அகல்விளக்கு பதிப்பகத்தில் இருந்து 1800 புத்தகங்கள் பெரியார் அறிவுலகத்துக்கு வாங்கப்பட்டிருப்பதை அம்பலப்படுத்தினார்.

தமிழக முதல்வரும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், இந்த புத்தக கொள்முதல் ஊழல் குறித்து கண்டனங்களைப் பதிவு செய்தனர். அரசுத் தரப்பில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் விசாரணைக்கு குழு அமைத்துள்ளதாக உத்தரவிட்டுள்ளார்.

இந்தப் புத்தக கொள்முதலில், பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என கடந்த 7-ஆம் தேதி, நான் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்தேன்.

ஆனால், இதுவரை எந்தவொரு குற்ற வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அரசு நியமித்துள்ள நிர்வாக ரீதியிலான விசாரணைக் குழு போதுமானதாக இல்லை. எந்தவொரு விசாரணையும் நடத்தாமல், முந்தைய அரசு முதல் குற்றம்சாட்டுவதால், இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பான கோப்புகளை பறிமுதல் செய்து பத்திரப்படுத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்.

எனது புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரியார் அறிவுலக முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிய கோரி திமுக வழக்கு
“கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் முதல்வர் விஜய் பதில் என்ன?” - நயினார் நாகேந்திரன்

X