

சென்னை: அதிகாரிகள் மீது அதிருப்தி, மாவட்ட நிர்வாகிகள் அலட்சியம் என தேர்தல் தோல்வி குறித்து ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட அறிக்கையை திமுக ஆய்வுக்குழு சமர்ப்பித்துள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும்கட்சியாக இருந்த திமுகதோல்வியடைந்தது. இதையடுத்து தேர்தல் முடிவுகள் குறித்து களஆய்வு செய்வதற்காக 36 பேர் கொண்ட 19 குழுக்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். அதைத்தொடர்ந்து, அக்குழுக்கள் தமிழகம் முழுவதும்
தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தன. அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை அந்த குழுக்கள் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்து வருகின்றன.
அதன்படி சிவகங்கை, புதுக்கோட்டை தெற்கு, மதுரை மாநகர்,மதுரை வடக்கு ஆகிய மாவட்டங்களுக்கான களஆய்வுகளை இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் மற்றும் மருத்துவரணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் கொண்ட குழு மேற்கொண்டது. இந்தக் குழு ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட தொகுப்பறிக்கை மற்றும் இதரஆவணங்களை டிராலி சூட்கேஸில் வைத்து கொண்டுவந்து தலைமையிடம் நேற்று சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் திமுக தோல்விக்கான காரணம் குறித்து பல்வேறு விதமான கருத்துகள் இடம்பெற்றுள்ள தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக, தேர்தலுக்கு முன்னர் களநிலவரங்களை சரியாக கூறாமல் தலைமைக்கு அதிகாரிகள் அதிக நம்பிக்கை அளித்தனர். பல மாவட்டச் செயலாளர்கள் அதிகாரப் போக்குடன் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளனர். இளைஞரணிக்கு போதுமான முக்கியத்துவம் வழங்கப்பட வில்லை. உட்கட்சி பூசல்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படாதது என்பன உட்பட பல்வேறு புகார்கள் அதில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.