

திமுக-வின் ரூ.8 ஆயிரம் கூப்பன் மாதிரி விநியோகம் தவறு என்று தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மார்ச் 30-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், "வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள், ரூ.8 ஆயிரம் மதிப்பிலான கூப்பனை பயன்படுத்தி வாஷிங் மெஷின், டிவி. ஃபிரிடஜ், மிக்சி, ‘மைக்ரோவேவ் அவன்’ மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உயயோகப் பொருட்களை புதிதாக வாங்கிக்கொள்ள அல்லது ஏற்கெனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களுக்கு மாற்றாகவும் பெற்றுக்கொள்ள 'இல்லத்தரசி' திட்டம் செயல்படுத்தப்படும்" என்ற வாக்குறுதியும் இடம்பெற்றது.
இந்த ‘இல்லத்தரசி திட்டம்’ குறித்து தமிழகம் முழுவதும் திமுக-வினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சில நிர்வாகிகள் ஒருபடி மேலே சென்று, ரூ.8 ஆயிரம் கூப்பனின் மாதிரியை தயாரித்து, வீடு வீடாக வழங்கி வாக்குச் சேகரித்து வருகின்றனர். இது தொடர்பாக படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள் இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என குற்றஞ்சாட்டி வருகின்றன.
இதனிடையே, இவ்வாறு மாதிரி கூப்பன் வழங்க தலைமை தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற்றிருப்பதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, ஊடக விளம்பரச் சான்றையும் இணைத்துள்ளனர். இதற்கு தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் எக்ஸ் தள பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
மேற்கூறிய சான்றிதழ் மின்னணு ஊடகங்களில் உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதற்காக மட்டுமே வழங்கப்பட்டது என இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. இச்சான்றிதழ், அச்சிடப்பட்ட பிரசுரப் பொருட்கள், குறிப்பாக, துண்டுப் பிரசுரங்கள் அல்லது கைப்பிரதிகள் ஆகியவற்றுக்குப் பொருந்தாது. அத்தகைய அச்சிடப்பட்ட பொருட்கள் அனைத்தும் இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951-ன் பிரிவு 127-ஏ மற்றும் நடைமுறையில் உள்ள மாதிரி நடத்தை விதிமுறைகள் ஆகியவற்றைப் பின்பற்றி தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே, மேற்கண்ட வகையில் வெளியிடப்பட்ட தகவல் உண்மைக்கு புறம்பானதும் தவறாக வழிநடத்தக் கூடியதுமானதாகும். இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, “துண்டுப் பிரசுரங்கள், கைப்பிரதிகளை அச்சிடுவதற்கு முன்பே தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் அச்சிட்டு விநியோகிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி மாதிரி கூப்பன்களை விநியோகித்தவர்கள் மீது சில மாவட்டங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.