

சென்னை: ஆட்சியில் பங்கு கோரிக்கையை ஏற்க முடியாது, கூட்டணிக்குள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என காங்கிரஸ் உட்பட தோழமை கட்சிகளிடம் திமுக திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை திமுக முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. ஓரணியில் தமிழ்நாடு, உடன்பிறப்பே வா, மண்டல மாநாடுகள் போன்ற தொடர் செயல்பாடுகளை திமுக முன்னெடுத்து வருகிறது. அதேநேரம்
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் ‘ஆட்சியில் பங்கு’ என்ற கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.
தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டில் பேசியபோது கூட்டணி ஆட்சி என அறிவித்தார். இதன்தொடர்நிகழ்வாக திமுக கூட்டணியில்
இந்த விவகாரம் பேசுபொருளானது. எனினும், இதில் திமுக தொடர்ந்து மவுனம் காத்துவந்தது. இந்நிலையில் கூட்டணி ஆட்சி கோரிக்கையை ஏற்க முடியாது என தோழமை கட்சிகளிடம் திமுக தலைமை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுகவைப் பொறுத்தவரை சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், இது கூட்டணிக்குள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். வாக்காளர்களிடமும் திமுக தனித்து மெஜாரிட்டி பெறாது என்ற தவறான பிம்பத்தை உருவாக்கிவிடும் என்று அதன் தலைமை கருதுகிறது. இதன் காரணமாக தொகுதிப் பங்கீட்டில் வேண்டுமானால் சில சமரசங்களை செய்கிறோம். ஆனால், அதிகாரப் பங்கீடு கோரிக்கையை கைவிட வேண்டுமென தோழமைக் கட்சிகளிடம் திமுக தலைமை தெரிவித்துவிட்டதாக திமுக தலைமை அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் நடைபெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஆகியோர் இடையேயான சந்திப்பிலும் திமுகவின் நிலைப்பாட்டை உறுதியாக ஸ்டாலின் கூறிவிட்டதாக கூறப்படுகிறது. அத்துடன், காங்கிரஸ் உட்கட்சி பிரச்னைகளால் தொகுதி ஒதுக்கீட்டிலும் திமுகவுக்கு உள்ள சிரமங்களை ஸ்டாலின் விளக்கியதாகவும் தெரிகிறது.
அதற்கு தேசிய தலைமை திமுகவுடன் தொடர்ந்து பயணிக்கவே விரும்புவதாகவும், திமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டால், இத்தகைய தேவையற்ற சலசலப்புகளை தவிர்க்கலாம் என்றும் சிதம்பரம் கூறியதாகவும் பேசப்படுகிறது. திமுகவின் இந்த முடிவால் அதன் கூட்டணியில் பெரிய மாற்றங்கள் ஏற்படாது என்பதே அரசியல் விமர்சகர்கள் கருத்தாக உள்ளது.