

புதுடெல்லி: டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவி வரும் அதீத பனிமூட்டம் மற்றும் கடும் குளிர் காரணமாக, இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த ஆரஞ்சு எச்சரிக்கையை தற்போது சிவப்பு எச்சரிக்கையாக மாற்றியுள்ளது.
டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 128 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.மேலும், 8 விமானங்கள் ஜெய்ப்பூர் மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. சுமார் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணிநேரம் தாமதமாக இயக்கப்பட்டன.
இதேபோல், ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு வரவேண்டிய 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் கடும் பனிமூட்டத்தால் நீண்ட நேரம் தாமதமாக வந்து சேர்ந்தன. ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் நிலையங்களிலும் விமான நிலையங்களிலும் தவித்து வருகின்றனர்.
நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று முதல் ஜனவரி 1 வரை விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பனிமூட்டத்துடன் சேர்ந்து டெல்லியின் காற்றின் தரமும் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. இன்று காலை ஆனந்த் விஹார் பகுதியில் காற்றின் தரக் குறியீடு 459 ஆக பதிவாகியுள்ளது. இது மிகவும் மோசமான நிலையாக கருதப்படுகிறது.
பொதுமக்கள் சாலைகளில் வாகனங்களை ஓட்டும்போது முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி மெதுவாகச் செல்லுமாறு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், விமானப் பயணிகள் தங்களின் பயண நேரத்தை உறுதி செய்துகொண்டு விமான நிலையத்திற்கு வருமாறு விமான நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.