மதுரை மாநகராட்சியில் எதிர்க்கட்சியாக மாறியும் ‘இணக்கம்’ காட்டும் திமுக கவுன்சிலர்கள்

மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுப்பார்களா?
மதுரை மாநகராட்சியில் எதிர்க்கட்சியாக மாறியும் ‘இணக்கம்’ காட்டும் திமுக கவுன்சிலர்கள்
Updated on
2 min read

மதுரை: சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்பு எதிர்க்கட்சியாக மாறியும் மதுரை மாநகராட்சிக் கூட்டங் களில் திமுக கவுன்சிலர்கள் பெரும்பாலானோர் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்காமல் நிர்வாகத்தை அனுசரித்துச் செல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சித் தேர்தலில் 67 வார்டுகளில் திமுக வெற்றிபெற்று அக்கட்சியை சேர்ந்த இந்திராணி மேயரானார். மார்க்சிஸ்ட் கட்சியின் நாகராஜன் துணை மேயரானார். தொடக்கத்தில், மாநகராட்சி கல்வெட்டுகளில்கூட பெயரைப் போடாமல் திமுகவினர் துணை மேயரைப் புறக்கணித்தனர். ஒரு திமுக கவுன்சிலர்கூட அவருக்கு ஆதரவாக நிற்கவில்லை. மார்க்சிஸ்ட், திமுக இடையே மோதல் தொடர்ந்தது. ஒருமித்த கருத்துடன் திமுகவினரால் மேயரை தேர்வு செய்ய முடியவில்லை.

அதனால், சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு மேயரை நியமிக்கலாம் என திமுக மேலிடம் தள்ளிப்போட்டது. ஆனால், தேர்தல் முடிவு திமுக வுக்கு சாதகமாக அமையாததால் மாநகராட்சியில் அவர்கள் எதிர்பார்த்தபடி மேயரை நியமிக்க முடியவில்லை. துணை மேயர் நாகராஜனுக்கு திடீர் அதிர்ஷ்டமாக பொறுப்பு மேயராக அதிகாரமிக்கவராக உருவெடுத்துள்ளார்.

பெரும்பான்மை கவுன்சிலர் கள் திமுக, அதிமுகவில் இருந்தாலும், அவர்களை துணை மேயர் நாகராஜன் தனி நபராக ஏதோ ஒரு வகையில் சமாளித்து கடந்த 3 மாநகராட்சிக் கூட்டங்களிலும் முக்கிய தீர்மானங்களையும் நிறைவேற்ற வைத்து கவுன்சிலர்கள் கூட்டத்தைப் புறக்கணிக்க விடாமல் நடத்திக் காட்டினார். திமுக கவுன்சிலர்கள் மேயர் இந்திராணிக்கு கொடுக்காத ஒத்துழைப்பை, துணை மேயர் நாகராஜனுக்கு வழங்கி திரைமறைவில் அனுசரித்துச் செல்வதாகக் கூறப்படுகிறது.

மாநகராட்சிக் கூட்டங்களில் திமுக கவுன்சிலர்கள் வெறும் ‘அரசியல்’ பேசி மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்காமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் மாநகராட்சிக் கூட்டம் செப்.30-ல் நடைபெற இருக்கிறது. இனியாவது மக்கள் பிரச்சினைகளுக்காவும், முக்கிய விவகாரங்களுக் காகவும் திமுக கவுன்சிலர்கள் குரல் கொடுப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து திமுக கவுன் சிலர்கள் சிலர் கூறியதாவது: ஆளுங்கட்சியாக இருந்தபோது 3 கோஷ்டிகளாக மட்டுமே இருந்த திமுக கவுன்சிலர்கள், தற்போது பல கோஷ்டிகளாகிவிட்டனர். ஒவ்வொரு தரப்பையும் மாநகராட்சி நிர்வாகமும், துணை மேயர் தரப்பும் எளிதாகச் சாமாளித்து ஒட்டுமொத்த தீர்மானங்களையும் நிறைவேற்றி கூட்டங்களை வெற்றிகரமாக நடத்துகின்றன.

மாநகராட்சி தூய்மைப்பணி ‘அவர் லேண்ட்’ விவகாரம், வார்டுகளில் பணிகள் நடக்காதது, நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் மக்கள் பிரச்சினைகளைப் பேசுவதற்கு ஏராளம் இருந்தும் ஒரு சில திமுக கவுன்சிலர்களை தவிர மற்ற அனைவரும் திரைமறைவு அனுசரணையில் உள்ளனர். ஆணையர், துணை மேயர் ஆகியோர் மாநகராட்சிக் கூட்டத்தை எப்படி நடத்துவது, கவுன்சிலர்களை எப்படி சமாளிப்பது என ஒரு முன் தயாரிப்பு ஆலோசனைக் கூட்டம் போட்டாலும், கூட்டத்தில் என்ன பேச வேண்டும், எதைத் தவிர்ப்பது என்று சில கட்சி கவுன்சிலர்கள் வெளியே திட்டமிட்டு வருகின்றனர்.

பதவிகளை இழந்த முன்னாள் மண்டலத் தலைவர்கள், 20-க்கும் மேற்பட்ட திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றனர். இதனாலும் எதிர்த்து கேள்வி கேட்பது குறைந்துள்ளது. திமுக கவுன்சிலர்கள் சிலரின் போக்கு அக்கட்சி வளர்ச்சித்து எதிராகவே இருக்கிறது, என்றனர்.

மதுரை மாநகராட்சியில் எதிர்க்கட்சியாக மாறியும் ‘இணக்கம்’ காட்டும் திமுக கவுன்சிலர்கள்
ஜெம் கிரானைட் வீரமணிக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: ரகுபதி திட்டவட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in