“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை முடக்க திமுக சதி” - எல்.முருகன் குற்றச்சாட்டு

எல். முருகன் | கோப்புப் படம்

எல். முருகன் | கோப்புப் படம்

Updated on
2 min read

சென்னை: பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை முடக்க திமுக சதி செய்வதாகவும், அதற்காகவே தொகுதி மறுவரையறை என்ற கபட நாடகத்தை மு.க.ஸ்டாலின் ஆடுவதாகவும் மத்திய இணை அமைச்சர் L. முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக எல். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டத்தை நடைமுறைபடுத்த, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கான நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் வருகின்ற 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்கப்படவுள்ளதால் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலங்களும் பாதிக்கப்படாத வகையில் தொகுதிகள் வரையறை செய்யப்படும் என்று, பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உறுதி அளித்துள்ளனர்.

ஆனால், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், திமுக தலைவர் ஸ்டாலின், தொகுதி மறுவரையறையை வைத்து விஷமப் பிரசாரம் செய்து வருகிறார்.

தமிழகத்திற்கு என்று எதுவும் செய்யாமல், 5 ஆண்டு காலமும் “கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன்” என மாநிலத்தைச் சுரண்டி பிழைத்த திமுக, மக்களுக்கு செய்த திட்டங்கள் என்று கூறிக் கொள்வதற்கு ஏதுமில்லை.

செய்ததை சொல்லி வாக்கு கேட்க திராணியற்ற மு.க.ஸ்டாலின், பாஜக தமிழகத்திற்கு எதிராக செயல்படுவதாக ஒரு பொய்யுரையை கட்டமைக்கிறார்.

தமிழகத்தின் நலனிற்கென்று எதுவும் செய்யாமல், எதை செய்யப்போகிறோம் என்பதையும் சொல்ல முடியாத திமுக-வினர், தங்களது பொய் புரட்டு மூலம் வெல்ல முடியுமா என எண்ணுகின்றனர்.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு மீதும் தமிழ்நாட்டு மக்கள் மீதும் பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர். மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு சேர்த்துள்ளது.

திமுக கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி, மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மக்கள்தொகை அடிப்படையிலேயே தொகுதிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டன. அப்போது தமிழகத்தின் உரிமைகள் பறிபோன போது இதே திமுக என்ன செய்து கொண்டிருந்தது? மு.க.ஸ்டாலினுக்கு இதுமட்டும் மறந்துபோகுமோ?!

தங்களுடைய ஆட்சிக்காலம் முழுவதும் தமிழகத்தை வஞ்சித்து, தமிழர்களுக்கு எதிராகவே அரசியல் செய்து வந்த காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்துக் கொண்டு வரும் ஸ்டாலினுக்கு, தொகுதி மறுவரையறை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது.

மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வந்து விடக்கூடாது என்பது மட்டும் தான் தீய சக்தி திமுக-வின் எண்ணம். ஜமீன்தார் அரசியல் செய்து வரும் கருணாநிதி குடும்பத்திற்கு, பெண்களிடம் அதிகாரத்தை கொடுப்பது என்றாலே கசக்கத்தானே செய்யும். ஆணாதிக்கம் மிகுந்த திமுக எனும் குடும்ப கட்சிக்கு, பெண் விடுதலை எட்டிக்காயாக கசக்கத் தானே செய்யும்.

தனது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு மகுடம் சூட்ட விரும்பும் ஸ்டாலின், தனது சகோதரி கனிமொழி அரசியலில் வளர்வதைக் கூட சகித்துக் கொள்ள முடியாதவர். இவரும், இவரது கட்சியும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க எப்படி முன்வரும்?

பெண் சுதந்திரம் பேசுவதாகவும், சமூகநீதி காவலர்கள் எனவும் காலமெல்லாம் பொய்யுரைத்து தமிழக மக்களை ஏமாற்றி வரும் திமுக-வை, தமிழக மக்கள் இந்த சட்டமன்றத் தேர்தலோடு வெறுத்து ஒதுக்கப்போகும் காலம் வெகுதொலைவில் இல்லை” என தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>எல். முருகன் | கோப்புப் படம்</p></div>
காரைக்குடியில் விஜய் பேசாமல் சென்றதற்கு காரணம் என்ன? - சீமான் விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in