காரைக்குடியில் விஜய் பேசாமல் சென்றதற்கு காரணம் என்ன? - சீமான் விளக்கம்

காரைக்குடியில் விஜய் பேசாமல் சென்றதற்கு காரணம் என்ன? - சீமான் விளக்கம்
Updated on
2 min read

சிவகங்கை: காரைக்குடியில் விஜய் பேசாமல் சென்றதுக்கு அண்ணன் மீதான பாசமே காரணமாக இருக்கலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நாம் தமிழர் கட்சியின் மானாமதுரை வேட்பாளர் சண்முகப்பிரியாவையும், சிவகங்கையில் அக்கட்சியின் வேட்பாளர் இந்துஜாவையும் ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: கருவேல மரங்கள், தைல மரங்களை அழிப்பேன். இது மரங்களின் பிசாசு. நான் ஆட்சிக்கு வந்தால் மரக்கன்றுகளை நடும் மாணவர்களுக்கு செயல்முறை தேர்வுக்கு மதிப்பெண் கொடுப்பேன். பத்தாயிரம் மரக்கன்றுகளை நட்டால் ரூ.10 லட்சம் கொடுப்பேன்.

ஊழல் லஞ்சத்தில் ஊறிய ஆட்சி; கேடுகெட்ட பணநாயகத்தை சுமக்கும் கூட்டம். தங்களது தவறை மறைக்க வாக்குக்கு பணம் கொடுக்கின்றனர். இலவசம் அறிவிக்கின்றனர். நமது வரலாறு போற்றக் கூடிய பெருமை மிக்கது. அதை மறந்ததால் நாம் மறைக்கப்பட்டோம். தற்போது மாற்று அரசியலுக்கான புரட்சி ஏற்பட வேண்டும்.

இலவசம் நம் இனத்தை இழிவாக்கிய சொல். அதை நீக்க வேண்டும். என்னிடம் ஒருமுறை நாட்டை கொடுத்து பாருங்கள். பிரதமர், முதல்வருக்கு கிடைக்கும் மருத்துவத்தை சாதாரண மக்களுக்கும் கொடுப்பேன்.

நான் பிறந்ததிலிருந்து அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம் சிவகங்கை பகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை. திமுக, காங்கிரஸ், அதிமுக, பாஜக ஒழிக்கப்பட வேண்டும். கச்சத்தீவை கொடுத்த, நம் இனத்தை அழித்த காங்கிரஸை ஒழிக்க வேண்டும்.

திமுக, அதிமுக இரண்டும் வேறு அல்ல. இரண்டும் ஒன்று தான். இரு தரப்புமே லஞ்சம் வாங்குகின்றனர்; வாக்குக்கு காசு கொடுக்கின்றனர். மற்றவர்கள் ரூ.2 ஆயிரம் தருவதை கூறினால் நம்புகிறீர்கள். ஆனால், சொல்வதை நம்ப மாட்டீர்கள். திராவிட கட்சிகள் தைரியம் இருந்தால் தனித்து போட்டியிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலவச அறிவிப்புகளை நான் வெறுக்கிறேன். அந்த அரசியலையே அழிக்க வேண்டுமென் என்று நினைக்கிறேன். கார்த்திகை தீபத்தை பாஜக வந்து புதிதாக ஏற்ற வேண்டாம்; பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டு தான் வருகிறது. திராவிடர்கள் ஆட்சி வந்ததால் தமிழர்களின் வரலாறு, தொன்று தொட்டு வந்த வழிபாட்டு முறைகள் மறைக்கப்பட்டன.

நான் திருமுருகன் பெருவிழா எடுத்தபோது அனைவரும் ஏளனம் செய்தனர். தற்போது திடீரென மற்றவர்களுக்கு முருகன் மீது பக்தி வந்துள்ளது. அந்தந்த நிலங்களில் போற்றப்படும் தெய்வங்களை வைத்து அரசியல் செய்கின்றனர். பாஜக கேரளாவில் ஐயப்பனை எடுத்து அரசியல் செய்தும், தோற்ற போன்து. ராமர் மீது இருந்த மதிப்பு குறைந்தது. தற்போது என் நிலத்தில் இருக்கும் முருகனை எடுத்துள்ளனர். சைபூசத் திருவிழாவை மாநில விழாவாக மாற்றுவோம் என்று சொல்கின்றனர். அவர்களுக்கு அதை தேசிய விழாவாக கூட நடத்த உரிமை இருக்கிறது, அதை செய்யுங்கள் பார்ப்போம்.

அண்ணன் மீதான பாசமே விஜய் காரைக்குடியில் பேசாமல் சென்றதுக்கு காரணமாக இருக்கலாம். தொகுதி மறுவரையறையை முதன் முதலில் சீரழித்தவர் கருணாநிதி. தமிழ் சமூகத்துக்கு குவிந்த வாக்கு கிடைக்க கூடாது என்பதற்காக தொகுதிகளை சீரழித்துவிட்டு, தற்போது சீரமைப்பை பற்றி எப்படி பேச முடிகிறது? அவரவர் கட்சிக்கு வெற்றிக்கு ஏற்ப தொகுதிகளை சீரமைக்கின்றனர்.

தற்போது 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மக்கள் தொகை அதிகரித்துவிட்டதால் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும். நாங்கள் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரு மக்களவைத் தொகுதியை ஏற்படுத்த வேண்டும் என்கிறோம். திமுக 5 ஆண்டுகள் செய்யாததை சொல்லி நாங்கள் வாக்கு கேட்கிறோம். ஆனால், அவர்கள் செய்ததை சொல்லாமல், மத்திய அரசு மீது பழியை போடுகின்றனர். நிதி கொடுக்காவிட்டால் வரிகொடா இயக்கம் நடத்த வேண்டியது தானே. ஆட்சியில் இருந்தபோது விட்டுவிட்டு, தேர்தல் வரும்போது நிதி தரவில்லை என்று ஏன் கூற வேண்டும்?.

மகளிர் உரிமைத் தொகையை யாரும் கேட்டார்களா? ஆசிரியர்கள் போராடாடுகிறார்கள்; ஆனால் நிதி இல்லை என்று அவர்களுக்கு கொடுக்கவில்லை; ஆனால் கேட்காதவர்களுக்கு நிதியை வாரிக் கொடுக்கின்றீர்கள். ரூ.10.5 லட்சம் கோடி கடன் பெற்று கொண்டு என்ன திட்டம் கொண்டு வந்தார்கள் என்று கேட்டால் சரியான பதில் இல்லை.

மத்தியில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் திமுக இருந்தபோது என்ன செய்தது? கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வந்ததா? கச்சதீவை மீட்டதா?

விஜய்க்கு முதல்வர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கான கனவோ, செயல்படுத்துவதற்கான உழைப்போ இல்லை. அவர்கள் ரூ.2,000 கொடுத்தால், இவர் ரூ.2,500 கொடுப்பேன் என்கிறார். இது திராவிட கட்சிகளை போன்ற அறிவிப்பாகவே உள்ளது. இலவசம் வெறுக்கத்தக்கது. மோடி இலவசத்தை எதிர்த்து பேசிவிட்டு, அதை அறிவித்திருப்பது அவர்கள் தோற்றுபோனதை காட்டுகிறது. வறுமையில் மக்களை வைத்திருந்தால் கையேந்த தான் செய்வர். இவ்வாறு அவர் கூறினார்.

காரைக்குடியில் விஜய் பேசாமல் சென்றதற்கு காரணம் என்ன? - சீமான் விளக்கம்
“நிதியமைச்சர் பதவியிலிருந்து கீழே இறக்கப்பட்டது ஏன்?” - பழனிவேல் தியாகராஜனுக்கு சுந்தர் சி கேள்வி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in