

சேலம்: “திமுகவினர் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்கின்றனர். ஆனால் அவர்கள் 20 இடங்களில் வெற்றி பெற்றாலே ஆச்சரியம்தான்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசினர்.
இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியது: “இந்த தேர்தல் கருணாநிதி குடும்பத்துக்கு மூடுவிழா நடக்கும் தேர்தல். அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு தீர்ப்பு கொடுத்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசு மேல்முறையீடு செய்தது.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 68 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தை நாடினோம். இந்த வழக்கிலும் சிபிஐ விசாரணை நடத்தக் கூடாது என்று திமுக அரசு மேல்முறையீடு செய்தது. அப்படியென்றால் குற்றவாளிகளை காப்பாற்றுகின்றனர். குற்றவாளிகள் வேண்டப்பட்டவர்கள் என்பதால் தடை வாங்குகிறார்கள். குற்றம் அதிகரிக்க காரணமே திமுக அரசுதான்.
டிரான்ஸ்பார்மர் கொள்முதல் டெண்டரில் ஏழு நிறுவனங்கள் ஒரே விலையைக் குறித்தன. இதில் ஊழல் நடந்துள்ளது என்று சிபிஐ விசாரணைக்கு கேட்டிருக்கிறோம். நீதிமன்றம் உத்தரவிட்டால் செந்தில் பாலாஜி எங்கிருக்க வேண்டுமோ, அங்கே பத்திரமாக இருப்பார்.
திமுக ஆட்சியில் கிட்னி திருடுறார்கள். மனிதாபிமானம் இல்லாமல் ஆட்சி நடக்கிறது. குமாரபாளையத்தில் ஒரு பெண்மணிக்கு கிட்னிக்கு பதிலாக கல்லீரலை எடுத்துவிட்டனர். உடல் உறுப்பை கொள்ளையைடிக்கும் அரசு தேவையா? இதுவரை அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா காலத்தில் பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிப்படைந்தது. எனவே, பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஆல் பாஸ் வழங்கப்பட்டது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது, அவர்களும், சிறப்பாக தேர்வெழுதி பட்டம் பெற்றனர். ஏக்கத்தில் இருந்த மாணவர்களுக்கு விடிவுகாலம் அமைந்தது.
கருணாநிதி குடும்பத்துக்கே மற்ற கட்சிகளை உடைப்பது தான் வேலை. அதையெல்லாம் உடைத்து அதிமுகவும் பாமகவும் கூட்டணி வைத்தோம், எங்களை வீழ்த்த ஸ்டாலினால் மட்டுமல்ல, அவர் அப்பாவாலும் முடியவில்லை. பத்து தோல்வி பழனிசாமி என்கிறார் ஸ்டாலின். 2021 தேர்தலில் சேலம் மாவட்டத்தின் 11 தொகுதிகளில் 10-ல் வென்றோம். 2011-ல் நீங்கள் எதிர்க்கட்சியாக வந்தீர்களா..? கருணாநிதி இருக்கும்போதே எதிர்க்கட்சியாக வரமுடியவில்லை.
ஜெயலலிதா மறைந்த பின்னரும் கூட எதிர்க்கட்சியாக அதிமுக அமர்ந்தது. ஆனால், 2011 முதல் 2021 வரை பல தேர்தல்களில் திமுக தோல்வி அடைந்தது.
திமுகவினர் 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்கின்றனர். ஆனால் அவர்கள் 20 இடங்களில் வெற்றி பெற்றாலே ஆச்சரியம்தான்.
அன்புமணி சொன்னதுபோல், நம்முடன் கூட்டணி இருந்தவர் (பிரேமலதா), எதிரியுடன் கூட்டணி சேர்ந்த பின்னரும் நமக்காக பிரச்சாரம் செய்துள்ளார். எப்போதும் உண்மை உறங்காது, தர்மம் தோல்வியடையாது. எதிரியிடம் போய் கைகோத்து நின்றாலும் உள்ளே இருக்கும் மனம் வெளிப்படுத்துகிறது, நமக்காக குரல் கொடுப்பதற்கு நன்றி.
எப்போது பார்த்தாலும் ஸ்டாலின் 39 எம்பிக்கள் வெற்றி பெற்றோம் என்கிறார். நாடாளுமன்றத்தில் அத்தனை பேரும் பெஞ்ச்சை தேய்க்கிறார்கள். சேலத்தில் பஸ்போர்ட், ராணுவ தளவாடத் தொழிற்சாலைக்கெல்லாம் மத்திய அரசிடம் கேட்டீர்களா? ஸ்டீல் பிளான்ட்டில் 500 ஏக்கரில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது, அதையும் திமுக கூட்டணி எம்பிக்கள் அழுத்தம் கொடுத்து பெறவில்லை.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கேபிள் கட்டணம் பாதியாக குறைக்கப்படும். அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட தொழிற்சாலைகள் உற்பத்தியை தொடங்கியதால்தான், தமிழகத்தில் தற்போது பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருக்கிறது.
திமுக ஆட்சியில் தொழில் முதலீடு 1179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 15 லட்சத்து கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது, என்று பச்சை பொய் சொல்கிறார். இதுகுறித்து வெள்ளை அறிக்கை கேட்டேன், வெள்ளை பேப்பரை காட்டினார் அந்த அமைச்சர்.
1998-ல் அதிமுக பாஜகவோடு கூட்டணியில் இருந்தோம், ஜெயலலிதா வைத்த கோரிக்கையை ஏற்று, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு வாஜ்பாய் அனுமதி கொடுத்தார். அதிமுக தம்பிதுரை சட்டத்துறை அமைச்சராக இருந்து மசோதாவை தாக்கல் செய்தபோது முலாயம் சிங் யாதவ் கட்சியின் எம்பி மசோதாவைப் பிடுங்கி கிழித்து எறிந்தார்.
இப்போது பிரதமர் மோடி கொண்டு வந்தார். ஏற்கெனவே ஜெயலலிதா கொண்டுவர நினைத்ததை பிரதமர் மோடி கொண்டுவந்தார். இது நிறைவேறி இருந்தால், பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 33% இடஒதுக்கீடு கிடைத்திருக்கும், அதை தடுத்துவிட்டனர்.
உங்கள் உரிமையை பறித்த கட்சி திமுக, காங்கிரஸ். எனவே, பெண்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது. பெண்கள் மசோதாவை தோற்கடித்த கட்சிக்குத் தகுந்த பாடம் புகட்டுங்கள். அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என்றார் எடப்பாடி பழனிசாமி.