திமுக சார்பில் போட்டியிடும் 164 வேட்பாளர்களை அறிவித்தார் ஸ்டாலின் - முழு விவரம்

31 அமைச்சர்கள் மீண்டும் போட்டி; 3 பேருக்கு வாய்ப்பு மறுப்பு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 164 வேட்பாளர்கள் பட்டியலை கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று வெளியிட்டார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 164 வேட்பாளர்கள் பட்டியலை கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று வெளியிட்டார்.

Updated on
2 min read

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 164 வேட்பாளர்கள் பட்டியலை கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதில் 60-க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் துரைமுருகன் உட்பட 31 அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், 3 அமைச்சர்கள், 17 மாவட்டச் செயலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அதிமுக ஏற்கெனவே தொகுதிப் பங்கீட்டை முடித்து, 150 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆளும்கட்சியான திமுக சார்பில் போட்டியிடும் 164 வேட்பாளர்கள் பட்டியலை கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று வெளியிட்டார்.

கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் மீண்டும் களம் காண்கின்றனர். தற்போதைய அமைச்சர்களில் காட்பாடியில் துரைமுருகன், திருச்சி மேற்கில் கே.என்.நேரு, ஆத்தூரில் ஐ.பெரியசாமி, திருவண்ணாமலையில் எ.வ.வேலு, குறிஞ்சிப்பாடியில் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், அருப்புக்கோட்டையில் சாத்தூர் ராமச்சந்திரன், திருச்சுழியில் தங்கம் தென்னரசு, திருமயத்தில் ரகுபதி, ஈரோடு மேற்கில் முத்துசாமி,திருப்பத்தூரில் பெரியகருப்பன், ஆலந்தூரில் தா.மோ.அன்பரசன், காங்கேயத்தில் மு.பெ.சாமிநாதன், தூத்துக்குடியில் கீதா ஜீவன், திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன், முதுகுளத்தூரில் ராஜ கண்ணப்பன் , சேலம் வடக்கில் ராஜேந்திரன், ஒட்டன்சத்திரத்தில் சக்கரபாணி, சைதாப்பேட்டையில் மா.சுப்பிரமணியன், மதுரை கிழக்கில் மூர்த்தி, குன்னத்தில் எஸ்.எஸ்.சிவசங்கர், சென்னை துறைமுகத்தில் சேகர்பாபு, திருவிடைமருதூரில் கோவி.செழியன், மதுரை மத்தியில் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், ஆவடியில் சா.மு.நாசர்,திருவெறும்பூரில் அன்பில் மகேஸ், ஆலங்குடியில் மெய்யநாதன், திட்டக்குடியில் சி.வி.கணேசன், மன்னார்குடியில் டிஆர்பி. ராஜா, ராசிபுரத்தில்மதிவேந்தன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ராதாபுரத்தில் அப்பாவு, கீழ்பென்னாத்தூரில் கு.பிச்சாண்டி மீண்டும் போட்டியிடுகின்றனர்.

இதில், துரைமுருகன் 13-வது முறையாகவும், சாத்தூர் ராமச்சந்திரன் 12-வது முறையும் தேர்தலில் போட்டியிட உள்ளனர். தற்போதைய அமைச்சர்களான மனோ தங்கராஜ், காந்தி, கயல்விழி செல்வராஜ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, ராமச்சந்திரனுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. கயல்விழியின் தாராபுரம் தொகுதியில் இந்திராணி போட்டியிடுகிறார். மனோதங்கராஜின் பத்மநாபபுரம் தொகுதிமார்க்சிஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி, ராணிப்பேட்டைக்கும், பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி திருக்கோவிலூர் தொகுதிக்கும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். ராயபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ரகுமான்கானின் மகன் சுபேர்கான், தியாகராய நகரில் மறைந்த முன்னாள் எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் மகன் ராஜாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சந்திரன், தேவராஜ், செல்வராஜ் உட்பட மாவட்டச் செயலாளர்களில் 19 பேருக்கு வாய்ப்பு தரப்படவில்லை.

தொகுதி மாறிய செந்தில் பாலாஜி: கடந்த முறை கரூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான், செஞ்சி தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை எதிர்த்து எடப்பாடி தொகுதியில் புதிய முகமான காசி களமிறக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (போடி), வைத்திலிங்கம் (ஒரத்தநாடு), மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்), தோப்பு வெங்கடாசலம் (பெருந்துறை) ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் (சேப்பாக்கம்), கார்த்திக் மோகன் (வில்லிவாக்கம்), கலை கதிரவன் உட்பட 12 வாரிசுகளுக்கு இத்தேர்தலில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில் திமுக சார்பில் மகாராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் லோகிராஜன் இவரது சகோதரர் ஆவார். ஒரே தொகுதியில் அண்ணன் - தம்பி இருவரும் களமிறங்குகின்றனர்.

திமுக வேட்பாளர்களில் 125 பேர் பட்டதாரிகள், 18 பெண்கள், 7 முனைவர்கள், 15 டாக்டர்கள், 17 பொறியியல் பட்டதாரிகள், 29 வழக்கறிஞர்கள், 4 முஸ்லிம்கள், 60-க்கும் மேற்பட்ட புதிய முகங்கள் இடம்பெற்றுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் 15-ல் திமுக போட்டியிடுகிறது. இதில் தற்போதைய எம்எல்ஏக்கள் தியாகராய நகர் கருணாநிதி, அண்ணா நகர் மோகன்,ராயபுரம் ஐட்ரீம் மூர்த்தி, வில்லிவாக்கம் வெற்றியழகன், திரு.வி.க. நகர் தாயகம்கவி, எழும்பூர் பரந்தாமன் ஆகியோருக்கு பதிலாக புதுமுகங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, ஒட்டுமொத்தமாக 121 தொகுதிகளில் திமுக - அதிமுக இடையே நேரடி போட்டி உள்ளது. அதேபோல, திமுக - பாஜக 18 தொகுதிகளிலும், பாமக மற்றும் அமமுகவுடன் தலா 8 தொகுதிகளிலும் திமுக மோதுகிறது.

‘உதயசூரியன்’ சின்னத்தில் 175 பேர்: திமுகவின் 164 வேட்பாளர்கள் மட்டுமின்றி, கூட்டணியில் உள்ள சிறு கட்சிகளின் 11 வேட்பாளர்களும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடன்இருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, ‘‘சேப்பாக்கம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறேன். சேப்பாக்கம் மக்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள் என நம்புகிறேன். இளைஞர்கள் அதிக அளவில் அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காகவே புதிய முகங்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்’’ என்று தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 164 வேட்பாளர்கள் பட்டியலை கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று வெளியிட்டார். </p></div>
“எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக கூட்டணி வெற்றிபெறும்” - முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in