

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நேற்று டி. ஜெ. கோவிந்தராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி தொகுதியின் திமுக வேட்பாளர் டி. ஜெ. கோவிந்தராஜனுக்கு நேற்று வாக்காளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் திமுக வேட்பாளராக தற்போதைய எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் 2-வது முறையாக போட்டியிடுகிறார்.
இவர், நாள் தோறும் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட, கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம்- நரசிங்கபுரம், நத்தம், மங்காவரம், மேலக்கழனி, ஓபசமுத்திரம், சுண்ணாம்புகுளம், மெதிப்பாளையம், எளாவூர், பெரிய ஓபுளாபுரம், எஸ்.ஆர்.கண்டிகை, பாத்தபாளையம், சிறுபுழல்பேட்டை பகுதிகளில் நேற்று டி. ஜெ. கோவிந்தராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, அவருக்கு வாக்காளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும், ஆரத்தி எடுத்தும், கிரேன் மூலம் மலர் மாலைகள் அணிவித்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த வாக்கு சேகரிப்பின் போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய டி.ஜெ.கோவிந்தராஜன், “ பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க ஏதுவாக கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிறுபுழல் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
தொகுதி முழுவதும் மின்விநியோகம் சீராக நடக்கும் வகையில், சுண்ணாம்புகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், சிமெண்ட் மற்றும் தார் சாலைகள், தெரு விளக்குகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், அரசு பள்ளிக் கட்டிடங்கள், சுற்றுச்சுவர்கள் மற்றும் கலைஞர் தொகுப்பு வீடுகள் உள்ளிட்டவை பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன.
கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துமனையில் ரூ.60 லட்சம் மதிப்பில் ரத்த சுத்திகரிப்பு நிலையம், ரூ.17.58 லட்சம் மதிப்பில் நவீன டிஜிட்டல், எகஸ்ரே இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளன.
திமுகவின் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையவும், 2-வது முறையாக நான் கும்மிடிப்பூண்டி எல்எல்ஏவாக இருக்கவும் வாக்காளர்கள் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்தால், தொகுதியில் விடுபட்டு போன அரசின் பல்வேறு திட்டப்பணிகளை தடையின்றி தொடர முடியும்.
மேலும், கிராமங்கள் தோறும் உயர் மின் கோபுரம் அமைத்து உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு தொகுதியை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறி வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின் போது, கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சித் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் உடன் சென்றனர்.