

அசோக் நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் பூ விற்கும் பெண்ணிடம் வாக்கு சேகரித்தார்.
சென்னை: திநகரில் கோடைக்காலத்தில் குடிநீர் பிரச்சினை உள்ள இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து நிரந்தர தீர்வு காணப்படும் என்று, திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் வாக்குறுதி அளித்தார்.
தி.நகர் தொகுதி திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் நேற்று அசோக் நகர் பகுதியில் எஸ்.வி லிங்கம் சாலை, ஒட்டகப்பாளையம், மஸ்தான் அலி கார்டன் உள்ளிட்ட இடங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
பெண்களுக்கு ரூ.8 ஆயிரம் பரிசுக் கூப்பன், மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்வு உள்ளிட்ட திமுக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்தார்.
முன்னதாக எஸ்.வி.லிங்கம் சாலை நாகாத்தமன் கோவில் பிரச்சாரத்தை தொடங்கிய ராஜா அன்பழகன் பேசும்போது, "தி.நகரில் கோடைக்காலத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படும் பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து மக்களின் குடிநீர் தேவை நிரந்தரமாக பூர்த்தி செய்யப்படும்.
தொகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இளைஞர்களுக்கு வேலைவா்ய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்" என்றார். பிரச்சாரத்தில் திமுக பகுதி செயலாளர்கள் கே. ஏழுமலை, கோ. சு. மணி, தலைமை செயற்குழு உறுப்பினர் எம். எஸ். பழனி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜெ. ஜானகிராமன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.