

சென்னை: நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்துச் செயல்பட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மதுராந்தகம் (தனி) தொகுதிக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தா.மோ.அன்பரசன் மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தாராபுரம் (தனி) தொகுதியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் மு.பெ.சாமிநாதன் மற்றும் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இடைத்தேர்தல் நடைபெறும் மாவட்ட உறுப்பினர்கள் பொறுப்பாளர்களுடன் இணைந்து வேட்பாளர்களின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என்று திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் காலியாகவுள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்.6-ம் தேதி நடத்தப்படவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், திமுக தனது வேட்பாளர்களை கடந்த 9ம் தேதி அறிவித்தது.
அதன்படி, வேட்பாளர்களாக மதுராந்தகம் (தனி) தொகுதியில் இ.பரந்தாமன் மற்றும் தாராபுரம் (தனி) தொகுதியில் எஸ்.சுகன்யா போட்டியிட உள்ளனர். இதற்கான அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அதில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பரந்தாமன் திமுகவின் சட்டத்துறை இணைச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார்.
மூத்த வழக்கறிஞரான இவர், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை எழும்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தற்போது 2-வது முறையாக அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சுகன்யாவும் வழக்கறிஞர். திமுகவில் மகளிரணி நிர்வாகியான இவருக்கு, இம்முறை தாராபுரம் தொகுதியில் போட்டியிட தலைமை வாய்ப்பு அளித் துள்ளது.