

கோப்புப் படம்
சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் திமுக, அதிமுக கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 30- முதல் தொடங்கவுள்ளது. தேர்தலுக்கு குறைந்த கால அவகாசமே இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்த முறை திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என 4 முனைப் போட்டி நிலவுகிறது. இதில் தவெக, நாம் தமிழர் ஆகியவை தனித்து களமிறங்க, திமுக, அதிமுக கூட்டணி பலத்துடன் போட்டியிட உள்ளன.
இந்நிலையில் ஆளும் திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக 27, பாமக 18, அமமுக 11, தமாகா 5 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அதிமுக 169 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. மேலும், அதிமுகவின் 23 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலையும் பழனிசாமி நேற்று முன்தினம் வெளியிட்டார். அதன்படி சேலம் எடப்பாடி தொகுதியில் பழனிசாமி மீண்டும் போட்டியிடுகிறார்.
இதையடுத்து மீதமுள்ள 146 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக மூத்த தலைவர்களுடன் பழனிசாமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
வேட்பாளர் தேர்வில் ஜெயலலிதா பாணி இருக்க வேண்டும் என்பதற்காக கடைக்கோடி தொண்டர்கள், சமூக பிரதிநிதித்துவம், பாலின பிரதிநிதித்துவம், புதிய முகங்கள், தேர்தல் செலவுகளை சமாளிக்கும் நிதி வலிமை உள்ளோருக்கு வாய்ப்பு அளிக்க இருப்பதாகவும், அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் விதமாக வேட்பாளர் தேர்வு இருக்கும் எனவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
மறுபுறம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 28, தேமுதிக 10, விசிக 8, கம்யூனிஸ்ட்கள் தலா 5, மதிமுக 4, முஸ்லிம் லீக், மமக, கொமதேக கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் 175 தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகிறது. திமுக தலைமை தற்போது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்விலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இதில் திமுக வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் கடந்த மார்ச் 17 முதல் 23-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 16,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தனது வேட்பாளர் பட்டியலை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. எனினும், கள ஆய்வுகள் மூலம் வேட்பாளர் பட்டியலை தயாரித்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போதைய அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகளை கவர புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் பட்டியல் தயாராகியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.