

ரூ.400 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை மருத்துவ பரிசோதனைக்காக போலீஸார் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
படம்: ம.பிரபு
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடிக்கும் மேல் மோசடி நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 2021–2026 திமுக ஆட்சிக் காலத்தில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்த்துதல் மற்றும் டிடிசிபி அனுமதி உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், திமுக பிரமுகருமான பி.டி.அரசகுமார்கைது செய்யப்பட்டார். அவர் 177 தனியார் பள்ளிகளிடம் இருந்து ரூ.400 கோடிக்கும் அதிகமாகப் பணம் பெற்றது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அரசகுமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான 20 வங்கிக் கணக்குகளும், அன்பில் மகேஸின் நெருங்கிய நண்பரும், சங்கத்தின் மாநில பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான முத்துகுமார் தொடர்புடைய 29 வங்கிக் கணக்குகளிலும் பணப் பரிமாற்றம் நடந்தது கண்டறியப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, அன்பில் மகேஸ் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த மாதம் 16-ம் தேதி சென்னை மற்றும் திருச்சியில் உள்ள அன்பில் மகேஸின் வீடுகளில் போலீஸார் சோதனை நடத்தினர். இதையடுத்து, சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் அன்பில் மகேஸிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த 16-ம் தேதி அன்று நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக நடந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யன், “இது ஒரு நிதி பயங்கரவாதம் தொடர்பான வழக்கு.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தனியார் பள்ளிகள் சங்க மாநில பொருளாளர் முத்துக்குமாரும், அன்பில் மகேஸும் நெருங்கிய நண்பர்கள். ஒன்றாகப் படித்தவர்கள். முத்துக்குமார் தலைமறைவாக உள்ளார். அவரை அன்பில் மகேஸ்தான் பாதுகாத்து வருகிறார். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது” என்று ஆட்சேபம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நீதிபதி தீர்ப்பை தள்ளி வைத்திருந்தார்.
நீதிபதி உத்தரவு: இந்நிலையில், அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி வி.லட்சுமி நாராயணன் நேற்று தீர்ப்பளித்தார். அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: அரசு தரப்பில் 177 பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து ரூ.400 கோடி வரை கட்சி நிதி என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட தொகை இறுதியாக யாரிடம் சென்றுள்ளது என்பதை கண்டறிய அன்பில் மகேஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம் என்றும் அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசியல் செல்வாக்கு மிக்க நபர்கள் தொடர்புடைய வழக்குகளில் விசாரணையின் ஆரம்ப கட்டத்திலேயே முன்ஜாமீன் வழங்கினால் அது புலன் விசாரணையைப் பாதிக்கும். தலைமறைவாகவுள்ள முத்துக்குமாரை பிடிக்க வேண்டிய கட்டாயத்தில், அவருடன் தொடர்புடைய அன்பில் மகேஸுக்கும் முன்ஜாமீன் வழங்குவது ஏற்புடையதாக இருக்காது. இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.
தனது முன் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, நேற்று மதியம் அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள வழக்கறிஞர் வில்சனின் அலுவலகத்துக்குச் சென்ற அன்பில் மகேஸ், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக அவரிடம் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை நடத்தி விட்டு வெளியே வந்த போது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவரை கைது செய்தனர். பின்னர் வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து அன்பில் மகேஸிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
பின்னர், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்த பின்னர், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி எல்.எஸ்.சத்யமூர்த்தி முன்னிலையில் அன்பில் மகேஷ் நேற்றிரவு 9.55 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, “முன் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்த நிலையில் அராஜகமாக காவல்துறை எனது அலுவலகத்துக்குள் நுழைந்து அன்பில் மகேஸை கைது செய்துள்ளனர்.
தீவிரவாதி இல்லை: அன்பில் மகேஸ் ஒன்றும் தீவிரவாதி இல்லை. அரசியல் ரீதியாக. பழி தீர்க்கின்றனர். முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்த பின் உடனடியாக அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?. ஏற்கெனவே செப்.18-ம் தேதி 8 மணி நேரம் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.
அப்படி உள்ள நிலையில் நோட்டீஸ் கொடுத்து விசாரணைக்கு ஆஜராக கூட சம்மன் அனுப்பாமல் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். உடல் நிலை மற்றும் மருத்துவ காரணங்களால் அவரை ரிமாண்ட் செய்யக்கூடாது. தனியார் பள்ளிகள் சங்கத்தின் இரு நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதல் தான் வழக்குக்கு காரணம்.
அரசகுமார் பணம் வசூலித்து தனது பெயரில் சொத்து வாங்கிய தாக தான் புகார் அளிக்கப்பட்டது. ஆளுநரின் ஒப்புதல் பெறாமல், பொதுத்துறை செயலாளர் அனுமதி பெற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று வாதிட்டார்.
அதற்கு போலீஸ் தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை வழக்கறிஞர் ஜான் சத்யன், “போலீஸார் ஒரு மணி நேரம் அலுவலகத்துக்கு வெளியில் காத்திருந்தனர். வழக்கறிஞரின் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோதுதான் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டார். கும்பகோணம் சம்பவத்துக்கு பிறகு நிரந்தர அங்கீகாரம் எந்த பள்ளிகளுக்கும் வழங்கப்படுவதில்லை. அரசின் கொள்கை முடிவை உடைக்கும் நோக்கில் தான் கோடிக்கணக்கில் லஞ்சத்தை கட்சி நிதி எனக்கூறி வசூலித்துள்ளனர்’’ என்று தெரிவித்து உயர் நீதிமன்ற தீர்ப்பு விவரங்களை தெரிவித்தார்.
நவம்பர் 6 வரை காவல்:
இருதரப்பிலும் நள்ளிரவு வரை வாதம் நீடித்த நிலையில் நீதிபதி சத்யமூர்த்தி தனது தீர்ப்பை வழங்கினார். அதில், வரும் நவம்பர் 6-ம் தேதி வரை அன்பில் மகேஸை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் சிறை நிர்வாகத்தினரை அணுகலாம். சிறையில் முதல் வகுப்பு, நல்ல உணவு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார். இதையடுத்து அன்பில் மகேஸ் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்ற விசாரணையின் போது சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் அன்பில் மகேஸ் விசாரணைக் கூண்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்.
சட்டப்படி எதிர்கொள்வேன்:
அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘என் மீதான வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி உள்ளேன். முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஆகிவிட்டது என்ற நினைப்பில் என்னை கைது செய்துள்ளனர். திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தோம்’’ என்றார்.