

சென்னை: எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியது திமுக. திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவை சேர்ந்த டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கவனித்து வந்தனர்.
தற்போது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை சுமுகமாக முடித்து வருகிறது திமுக. அந்த வகையில் மதிமுகவுக்கு எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் இன்று (மார்ச் 11) தொகுதி உடன்பாடு குறித்து கலந்து பேசினர். அதில் எதிர்வரும் தேர்தலில் மதிமுக 4 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதாக முடிவானது.
இதில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் தனி சின்னத்திலும் அக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28, முஸ்லீம் லீக், மமக-க்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.