

திமுக கூட்டணியில் சேர்ந்துள்ள தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டது. இதுதொடர்பான ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் இடையில் நேற்று கையெழுத்தானது.
சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை ‘சீட்’ ஒதுக்கப்பட்டதற்கான ஒப்பந்தம், முதல்வர் ஸ்டாலின் - சுதீஷ் இடையே நேற்று கையெழுத்தானது.
கடந்த 2005-ல் தேமுதிகவைத் தொடங்கினார் விஜயகாந்த். 2006 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக 8.4% வாக்குகளைப் பெற்றது. தொடர்ந்து 2009-ல்
10% என வளர்ச்சி கண்ட கட்சி, 2011-ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 7.9% வாக்குகளுடன் 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது.
அதன்பிறகு, தேமுதிக, 2016-ல் 2.6%, 2021-ல் 0.4% என வாக்குகளைப் பறிகொடுத்தது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்தும் அக்கட்சிக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை.
விருதுநகரில் விஜயபிரபாகரன் நூலிழையில் வெற்றி யைத் தவறவிட்டார். மேலும், தனது சகோதரர் எல்.கே.சுதீஷை மாநிலங்களவை எம்.பி.யாக்கலாம் என்று பிரேமலதா நினைத்தார். ஆனால், தேமுதிகவுக்கு அதிமுக சீட் வழங்கவில்லை.
வரும் தேர்தலில் தேமுதிக எந்த கூட்டணியில் சேரும் என்று பலரும் நினைத்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து திமுக கூட்டணியை உறுதி செய்தார் பிரேமலதா.
இந்நிலையில், நேற்றிரவு அண்ணா அறிவாலயத்துக்கு தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, கொள்கைப் பரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் வருகை தந்தனர். அப்போது, கூட்டணி அமைக்கும் போது, தேமுதிகவுக்கு உறுதி அளித்ததன் அடிப்படையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்பட்டது.
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில், ‘‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்வது. சட்டப்பேரவைத் தேர்தலில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையின் போது திமுகவை சேர்ந்த குழுவினரும், தேமுதிகவின் குழுவினரும் கலந்து பேசி போட்டியிடும் இடங்கள் குறித்து முடிவு செய்யப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் அண்ணா அறிவாலயத்தில் எல்.கே.சுதீஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் பிரேமலதா, மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்பாளரை பின்னர் அறிவிப்பார். மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில், எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது, ஒரு வாரத்துக்கு பிறகு அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் தெரிய வரும்’’ என்றார்.