

திமுக ஆட்சி ஒற்றை இன்ஜினில் தமிழகம் பாதுகாப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் பிரதமரின் பேச்சை மக்கள் நிராகரிப்பார்கள் எனவும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பரப்புரையை பிரதமர் மோடி மதுராந்தகத்தில் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். அப்போது, திமுக அரசு மீது ஊழல், போதை கலாச்சாரம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களைக் கூறினார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி ஏற்பட வேண்டும் என்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு இரட்டை இன்ஜின் ஆட்சி அவசியம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அவரது பேச்சுக்கு திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பதிலளித்துள்ளனர். இது தொடர்பாக அவர்களது விமர்சனங்கள்..
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: தமிழகத்தில் சாம, பேத, தான தண்டங்களை பயன்படுத்தி எப்படியாவது பாஜக காலூன்ற வேண்டும் என்ற நோக்கத்தில், அதிமுகவை நிர்ப்பந்தப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள கூட்டணியில் முதல் அரங்கேற்றம் நடந்து முடிந்துள்ளது. இக்கூட்டணிக்கு பெயர் அதிமுக கூட்டணியா? தேசிய ஜனநாயக கூட்டணியா? என்ற குழப்பம் நீடிக்கும் நிலையில், முரண்பட்டவர்களின் சந்தர்ப்பவாத கூட்டணியாகவே இது அமைந்திருக்கிறது.
இந்தியாவிலேயே பாஜகவை கடுமையாக எதிர்க்கிற ஒரு மாநிலமாக தமிழகம் இருப்பதை பிரதமர் மோடியால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. இதனால் அவர் பேசும்போது திமுக, காங்கிரஸ் கூட்டணியை விமர்சிப்பதிலேயே தனது உரையின் பெரும் பகுதியை செலவழித்திருக்கிறார். தமிழகத்துக்கு அவரும், மத்திய உள்துறை அமைச்சர்அமித் ஷாவும் எத்தனைமுறை வந்தாலும், பாஜகவின் தமிழக விரோத போக்குக்கு மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள்.
திக தலைவர் கி.வீரமணி: தமிழகத்தில் திமுக கூட்டணியை அசைக்கவே முடியாது என்பதை உணர்ந்ததால், அதிமுக என்ற ‘திராவிட’ முத்திரையுள்ள ஒரு கட்சியின் மீது சவாரி செய்து, தனது வெகுநாள் ஆசையான, தமிழகத்தை காவி அரசியல் மண்ணாக்கிட ‘வியூகம்’ வகுத்து களம் இறங்கியிருக்கிறது பாஜக. பிரதமர் மோடி பேசிய கூட்ட மேடையில் கூனிக் குறுகி உட்கார்ந்தவர்களில் வழக்கில் சிக்கிக்கொண்டோர், வெளியே வருவதற்கு வழி தேட முனைவோர், வழக்கில் சிக்கி விடக்கூடாதே என்று கவலையோடு இருந்தவர்கள் எத்தனை பேர்? வட மாநிலங்களில் அமித்ஷா போன்றவர்கள் கையாண்ட வித்தைகளும், வியூகங்களும் இங்கே செலாவணி ஆகாது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: பிரதமர் மோடி கூறிய இரட்டை இன்ஜினா, ஒற்றை இன்ஜினா என்பதைவிட, அது பாதுகாப்பான பயணமாக இருக்குமா? என்பது தான் முக்கியம். தமிழகத்தில் ஆட்சி எனும் ரயில் திமுக எனும் ஒற்றை இன்ஜினில் மிகவும் பாதுகாப்பாகவே ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை தமிழக மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழியின் குடும்பத்தினரும் ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டவர்கள். அந்த கும்பலின் காலில் விழுந்து, ஆட்சியை கைப்பற்றிய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மருத்துவத்துறையில் பலகோடி ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பாமக தலைவர் அன்புமணி போன்ற ஊழல் தலைவர்களை மேடையில் வைத்துக் கொண்டு கரப்ஷன், மாஃபியா, கிரைம் என பேச பிரதமர் மோடி கொஞ்சமும் வெட்கப்படவில்லை. பிரதமரின் அரசியல் பொய்யுரையை தமிழக மக்கள் அடியோடு நிராகரிப்பார்கள்.