

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் தர்மர் எம்.பி. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையில் சென்னையில் நேற்று அதிமுகவில் இணைந்தார்.
கடந்த 2022-ம் ஆண்டு அதிமுகவின் முதுகுளத்தூர் ஒன்றியச் செயலாளரும், முதுகுளத்தூர் ஒன்றியக்குழு தலைவராக இருந்தவர் ஆர்.தர்மர். இவர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்தார். அப்போது மாநிலங்களவையில் காலியான எம்.பி.பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அதிமுக சார்பில் 2 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருந்தனர்.
அப்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி ஆகியோர் இருந்தனர். அந்த நேரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும், ஓபிஎஸ் தீவிர ஆதரவாளரான தர்மரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.
பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் தர்மர் எம்பி பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்தார். பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால் தர்மர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தங்கள் அரசியல் எதிர்காலம் கருதி அவரிடமிருந்து விலகி, திமுக, அதிமுக, தவெகவுக்கு சென்றவண்ணம் உள்ளனர். இதன் தொடர்ச்சியாக தர்மர் எம்.பி. நேற்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சென்னையில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தீய சக்தி திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். அதற்கு அதிமுக பொதுச்செயலாளரும், வருங்கால முதல்வருமான பழனிச்சாமியின் கரங்களை பலப்படுத்த வேண்டும். மேலும் அதிமுக 100 ஆண்டுகள் ஆட்சி புரிய வேண்டும் என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்க வேண்டும் என விரும்புகிறேன்.
எனக்கும் பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோருக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நான் அதிமுக மாநிலங்களவை எம்.பி. மரியாதை நிமித்தமாக தான் பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்தேன்" என்றார். இந்நிகழ்வின்போது, கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.