

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் மதுரை மேற்கு, வடக்கு, திருப்பரங்குன்றம், மேலூர், திருமங்கலம், சோழவந்தான் ஆகிய தொகுதிகளில் அதிமுக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
மதுரை வடக்குத் தொகுதியை பாஜக கேட்பதாக கூறப்பட்ட நிலையில், மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக மதுரையில் போட்டியிட்டு தொல்வியடைந்த டாக்டர் சரவணனுக்காக கட்சித் தலைமையே அந்தத் தொகுதியை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என்று கூறப்படுகிறது.
அதனால் மக்களவைத் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்ற மதுரை தெற்குத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாகவும், அதை பாஜகவும் ஏற்றதாகவும் கூறப்படுகிறது.
பாஜக சார்பில் தெற்குத் தொகுதியில் மாநிலப் பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், கிழக்கு மாவட்ட பார்வையாளர் மகாலட்சுமி ஆகியோரில் ஒருவர் போட்டியிடலாம். வடக்குத் தொகுதியில் திமுக - அதிமுக நேரடிப் போட்டி உருவாகும் நிலையில் திமுகவில் மாநகர் செயலாளர் கோ.தளபதி போட்டியிட உள்ளார்.
டாக்டர் சரவணன் மதிமுக, திமுக, பாஜக போன்ற கட்சிகளுக்குச் சென்று வந்தவர் என்ற விமர்சனம் இருந்தாலும், அவர் அந்தக் கட்சிகளில் தீவிரமாக களமாடினார். தற்போது அதிமுகவிலும் அதே ஈடுபாட்டுடன் செயல்படுகிறார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் பலமான கூட்டணி அமையாததால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஒதுங்கிய நிலையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக களமிறங்கினார்.
தேர்தலில் பெரும் பணம் செலவிட்டு தீவிரமாக வேலை செய்தும் உட்கட்சி பூசலில் இவர் வெற்றிபெற்றுவிடக் கூடாது என்று கீழ்மட்ட நிர்வாகிகளை, மாவட்டத்தின் மேல்மட்ட நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றவிடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனாலேயே, செல்வாக்கான மதுரையில் அதிமுக வேட்பாளர் பா.சரவணன் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இதுதொடர்பாக சரவணன், கட்சித் தலைமையிடம் ஆதாரப்பூர்வமாக புகார் தெரிவித்தார். அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புத் தருவதாக உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் மதுரை வடக்குத் தொகுதியில் டாக்டர் பா.சரவணன், அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படாவிட்டாலும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
வடக்குத் தொகுதியில் திமுக எம்எல்ஏ தளபதி கட்சி பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை ‘பூத்’ கமிட்டிக்கு கூட ஆளில்லாத கட்சி என்று விமர்சனம் செய்ததால் அக்கட்சியினர் தளபதிக்கு எதிராகக் கொந்தளித்தனர்.
வடக்குத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடப் போவதாக சுவரொட்டிகள் ஒட்டி, தளபதி எம்எல்ஏ-வை கலங்கடித்தனர். தளபதி எம்எல்ஏ-வுக்கும், திமுகவுக்கும் எதிராக மாணிக்கம் தாகூர் எம்பி தினமும் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு கூட்டணிக்கு சிக்கலை உருவாக்கினார்.
கடைசியாக மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் கார்த்தி கேயன் பெயரை அறிவித்து அவர்தான் மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர் என்றும் பேசினார். இதனால் அதிருப்தி அடைந்த திமுக தலைமை புகார் தெரிவிக்கவே, காங்கிரஸ் தலைமை மாணிக்கம் தாகூரை, கூட்டணி பற்றி எதுவும் பேசக்கூடாது என்று அடக்கி வைத்தது.
தளபதி எம்எல்ஏ, மீண்டும் வடக்குத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார். திமுக தலைமையும் அவரைத்தான் வேட்பாளராக அறிவிக்க உள்ளது. வடக்குத் தொகுதியில் பழைய கசப்பு களை மறந்து திமுக-காங்கிரஸ் இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுவது சிரமம் என்று கூறப் படுகிறது.
திமுக கூட்டணியில் நீடிக்கும் இந்த சிக்கலைப் பயன்படுத்தி பா.சரவணனை வேட்பாளராக நிறுத்தி இந்தத் தொகு தியைக் கைப்பற்ற அதிமுக முயற்சிக்கிறது.
ஆனால், மாநகர் மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜூ, மற்றொரு நபரை வடக்குத் தொகுதிக்குப் பரிந்துரை செய்யும் பட்சத்தில், அவரது பரிந்துரையை நிராகரித்து சரவணனையே வேட்பாளராக அறிவிக்குமா? அல்லது செல்லூர் ராஜூ பரிந்துரை செய்யும் நபரை வேட்பாளராக அறிவிக்குமா? என்பது தலைமையின் முடிவில் உள்ளது.