

சூர்யநாராயணன் கொலை வழக்கில் கைதானவர்கள்.
பழநி: பல கோடி ரூபாய் சொத்து ஆவணத்துக்காக கொடைக் கானலில் தொழிலதிபரும், நடிகையின் தந்தையுமான சூர்யநாராயணன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், ஒருவரை தேடி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சூர்யநாராயணன் (73). நடிகை விஷ்ணுபிரியாவின் தந்தையும், தொழிலதிபருமான இவருக்கு சொந்தமான தங்கும் விடுதி, கொடைக்கானலில் உள்ளது.
பிப்.21-ம் தேதி விடுதியில் தங்கியிருந்த இளைஞர்கள் சிலர், பணியாளர்களை ஒரு அறையிலும், சூர்யநாரா யணனை ஒரு அறையிலும் கயிற்றால் கட்டிப் போட்டனர்.
மேலும், சூர்யநாராயணனின் வாய், மூக்கை டேப்பால் சுற்றி மூச்சுவிட முடியாதபடி செய்து கொலை செய்தனர். பின்னர், அந்த விடுதியில் இருந்த முக்கிய ஆவணங்கள், நகை, பணம் மற்றும் சிசிடிவி ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இந்நிலையில் கயிற்றால் கட்டப்பட்டிருந்த ஒரு பணியாளர் அதிலிருந்து விடுவித்து கொண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த கொடைக்கானல் போலீஸார் சூர்யநாராயணனின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது மகளும், நடிகை யுமான விஷ்ணுபிரியா அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை சிறப்பு தனிப்படை அமைத்து தேடினர்.
இதில் சோளிங்கர் பகுதியை சேர்ந்த ஷியாம் (31), அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த கோகுல்நாத் (26), ரஞ்சித்(32), திருவள்ளூவரை சேர்ந்த கிருஷ்ண பிரசாத் (25), அட்சய நடராஜ் (26), கார்த்தி (26), சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த கிரண் (36), அவரது தாயார் கிரிஜா (53), விடுதி பணியாளர் ஆறுமுகம் (54) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து தங்க நகைகள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், 2 கார்களை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மகேந்திரன் என்பவரை தேடி வருகின்றனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், சூர் யநாராயணனின் உதவியாளராக இருந்த கிரிஜாவின் வீட்டில் அவர் சில காலம் தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
உதவியாளராக மட்டுமின்றி பணத்தை இரட்டிப்பு செய்து தருவது போன்ற மோசடிகளிலும் கிரிஜா ஈடுபட்டு வந்துள்ளார். கிரிஜாவின் மகன் கிரணின் நண்பரான ஷியாமும் இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதற்கிடையே, சூர்ய நாராயணனின் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணம் கொடைக்கானலில் இருப்பதாகவும், அதனை திருடி வந்தால் பணம் தருவதாகவும் கிரிஜாவும், கிரணும் ஷியாமிடம் கூறியுள்ளனர்.
ஷியாமும் தனது நண்பர்களுடன் கொடைக்கானலில் உள்ள சூர்ய நாராயணனின் விடுதியில் தங்கியிருந்து சொத்தின் ஆவணம், பணத்தை திருடு வதற்காக அவரை கட்டிப் போட்டுள்ளனர். சத்தம் போட்டு விடுவார் என்பதற்காக சூர்யநாராயணனின் வாயில் டேப்பை ஒட்டினர்.
இதில் மூச்சுத்திணறி இறந்து விட்டார். கிரிஜாவுக்கும், விடுதி பணியாளர் ஆறுமுகத்துக்கும் ஏற்கெனவே பழக்கம் இருந் துள்ளது. சம்பவத்தன்று, அந்த இளைஞர்கள் தன்னையும் கட்டி போட்டதாக ஆறுமுகம் நாடகமாடியது தெரிய வந்தது.