

மதுரை: ”சட்டத் துறை அமைச்சர் நிர்மல்குமார், சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு மாநகராட்சி அதிகாரிகளுக்கும், மாநகர காவல் அதிகாரிகளுக்கும் தவறு செய்யாத திமுக கவுன்சிலர்களையும் சொத்து வரி முறைகேடு வழக்கில் சேர்க்கச் சொல்லி நெருக்கடி கொடுக்கிறார்” என்று மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் குழு தலைவர் ஜெயராம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவர் கூட்டத்தில் பேசும்போது, ”கடந்த ஜூலை 3-ம் தேதி நீதிமன்றத்தில் மாநகராட்சி சார்பில் சொத்து வரி முறைகேடு தொடர்பாக ஒரு கடிதம் தாக்கல் செய்துள்ளீர்கள். அதில் என்ன விவரம் குறிப்பிட்டுள்ளீர்கள் என கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்,” என்றார்.
அதற்கு பொறுப்பு மேயர் நாகராஜன், ”வழக்கு நீதிமன்றத்தில் நடக்கிறது. மாநகராட்சி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் தகவல்களை வெளியே சொல்ல முடியாது” என்றார்.
அதற்கு பதில் அளித்து ஜெயராமன் பேசுகையில், ”அப்படியென்றால், எப்படி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா முதல் அமைச்சர் நிர்மல் குமார், எம்.பி சு.வெங்கடேசன் போன்றவர்கள் சொத்து வரி முறைகேட்டில் ரூ.200 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக சொல்கிறார்கள்?
எங்களுடன் 8 ஆண்டு காலம் பயணித்த சு.வெங்கடேசன், இப்படி சொல்லும்போது எங்களுக்கு மிகுந்த வருத்தமாக உள்ளது. இவர்களிடம் ரூ.200 கோடிக்கு மேல் ஊழல் நடந்ததாக சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? யாரெல்லாம் உண்மையான குற்றவாளிகள் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுங்கள். அவர்களை சிறையில் அடைத்தால்கூட அதை திமுக வரவேற்கும்.
ஆனால், சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார், சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு மாநகராட்சி அதிகாரிகளுக்கும், மாநகர காவல் அதிகாரிகளுக்கும் தவறு செய்யாத திமுக கவுன்சிலர்களையும் சொத்து வரி முறைகேடு வழக்கில் சேர்க்கச் சொல்லி நெருக்கடி கொடுப்பதாக தகவல்கள் வருகிறது. இது, திமுகவின் மானப் பிரச்சனை. அப்படி எந்த முகாந்திரமும் இல்லாமல் முறைகேடு செய்யாத திமுக கவுன்சிலர்களை இந்த வழக்கில் சேர்த்தால், அமைச்சருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை எங்கள் கட்சி செல்லும்” என்றார்.
தொடர்ந்து மாநகராட்சி கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயராம், ”கடந்த மாமன்ற கூட்டத்தில் சொத்து வரி முறைகேட்டில் ரூ.200 கோடி முறைகேடு நடந்ததாக கூறிய அமைச்சர் நிர்மல் குமார் அதனை நிரூபிக்க சவால் விட்டிருந்தோம். ஆனால், தற்போது வரை அமைச்சரிடம் இருந்த சரியான பதில் வரவில்லை.
மாநகர போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும் ஆய்வு செய்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தபாலில், ரூ.200 கோடி ஊழல் என்பது முழுக்க பொய்யாக பரப்பப்பட்ட அவதூறு அரசியல். வெறும் ரூ.1.70 கோடி மட்டுமே ஊழல் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மாநகராட்சி வெள்ளக்கல் குப்பை கிடங்கு கடந்த 10 நாட்களாக தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த குப்பைக் கிடங்கு, அமைச்சர் நிர்மல் குமாரின் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்டது. குப்பை கிடங்கு தீயால், அப்பகுதியே தற்போது வரை புகைமண்டி கிடக்கிறது.
அந்தத் தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் அமைச்சர் நிர்மல் குமார், குப்பை கிடங்கு பற்றி எரிந்தபோதும் சரி, தற்போது எரிந்து புகை வரும்போதும் சரி, ஒருமுறை கூட வந்து ஆய்வு செய்யவி்ல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை. ஆனால், வாயை திறந்தால் செய்தியாளர்களிடம் உண்மைக்கும், நடைமுறைக்கும் சம்பந்தமே இல்லாமல் பொய், பொய்யாக பேசி வருகிறார்” என்று ஜெயராம் கூறினார்.
சொத்து பட்டியலை வெளியிட தயார்:
தொடர்ந்து பேசிய ஜெயராம், ”சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், பதவியேற்ற 2 மாதங்களில் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்களை நியமித்ததில் ரூ.200 கோடி ஊழல் செய்ததாக நான் சொல்லவில்லை. அவரது தவெக கட்சியை சேர்ந்த மகளிர் அணி வழக்கறிஞரே குற்றம்சாட்டியுள்ளார்.
தேனியில் ஒரு வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார். சிபிசிஐடி-யிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன் அமைச்சர் நிர்மல் குமார், 100 மாமன்ற உறுப்பினர்களும் சொத்து கணக்கை காட்ட வேண்டும் என்று சொல்கிறார்.
அப்படியென்றால் உங்கள் ஆட்சிக்கு ஆதரவாக இருக்கிற காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் அனைவரும் திருடர்களா என்று நான் கேள்வி கேட்கிறேன். இந்த மாதத்தில் ஒரு நாள், திமுக மாமன்ற உறுப்பினர்கள் 67 பேரும் தங்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்வதற்கு தயாராக இருக்கிறோம்” என்றார்.