‘காத்திருந்து... காத்திருந்து...’ - கூட்டணி அமைக்க முடியாமல் தவிக்கும் தேமுதிக!
‘காத்திருந்து... காத்திருந்து... காலங்கள் போனதடி’ என்ற விஜயகாந்த் படத்தின் பாடல் வரிகள் இப்போது அவரின் கட்சியான தேமுதிகவுக்கு சரியாக பொருந்திப் போகிறது. சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகவுள்ள சூழலில், இதுவரையிலும் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் தவித்து வருகிறது தேமுதிக.
தேமுதிக கடைசியாக மக்கள் பிரதிநிதிகளை அனுப்பியது 2011 சட்டப்பேரவைத் தேர்தல்தான். அதன்பின்னர் பல அணிகள் மாறி மாறி கூட்டணி அமைத்தாலும், ஒரு இடத்திலும் அக்கட்சியால் வெல்ல முடியவில்லை. 2024 தேர்தலில் அதிமுக கூட்டணியில் கடைசி நேரத்தில் சேர்ந்து 5 தொகுதிகளில் போட்டியிட்டது தேமுதிக. அந்த கூட்டணியே வாஷ் அவுட் ஆன நிலையில், விருதுநகரில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் மட்டும் வெற்றியின் விளிம்பு வரை சென்று தோல்வியடைந்தார்.
அதன்பின்னரும் அதிமுகவோடு நல்லுறவுதான் தேமுதிகவுக்கு இருந்தது. ஆனால், ராஜ்யசபா சீட் கொடுக்காத விரக்தியில் அதிமுகவுடனான உறவை துண்டித்து, திமுக பக்கமும் துண்டு போட ஆரம்பித்தது தேமுதிக. அதனால், இரு அணிகளிடம் கூட்டணி அமைக்கும் வகையில் கதவுகளை திறந்துவைத்தார் பிரேமலதா.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், திமுகவும், அதிமுகவும் தங்கள் கூட்டணியை கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டது. கொஞ்சம் முரண்டுபிடித்த அன்புமணியையும், தினகரனையும் கூட்டணி மேடையில் ஏற்றினார் பிரதமர் மோடி. அப்போது எப்படியும் தேமுதிக, என்டிஏ கூட்டணியில் இணைக்கப்படும் என்ற பேச்சு நிலவியது. ஆனால், எங்களிடம் யாரும் கூட்டணி பேச்சுவார்த்தையே நடத்தவில்லை என்று அதிர்ச்சியூட்டினார் பிரேமலதா.
தனிமைப்படுத்தப்படுகிறதா தேமுதிக: தேமுதிக 2011ல் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சியாக இருந்தது. ஒரு கட்டத்தில் தமிழகத்தின் மாற்று சக்தியாக விஜயகாந்த் பார்க்கப்பட்டார். ஆனால், அந்த காலமெல்லாம் இப்போது மாறிவிட்டது. இருந்தாலும், பிரேமலதாவும், அவரின் மகன் விஜய பிரபாகரனும் அதே மனநிலையில்தான் உள்ளனர் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இதனை மனதில் வைத்துக்கொண்டு எடுத்த எடுப்பிலேயே 20 சட்டப்பேரவை தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் என்ற கண்டிஷனுடன்தான் பேச்சுவார்த்தையையே தொடங்குகிறதாம் தேமுதிக. அதனால்தான், முதற்கட்ட பேச்சுவார்த்தையோடே இரு பெரும் கட்சிகளும் கப்சிப் ஆகிவிட்டார்களாம். அதுமட்டுமின்றி ‘பிரேமலதாவை துணை முதல்வராக்குவோம்’ என்று மாநில மாநாட்டில் சொல்லி அதிரவைத்தார் எல்.கே.சுதீஷ். மேலும், நாங்கள் இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என பிரேமலதாவும், விஜய பிரபாகரனும் சொல்லி வருவது திமுக, அதிமுகவை மேலும் எரிச்சலாக்கியுள்ளது என்றும் சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
அதிமுக தரப்பில் 6 முதல் 10 தொகுதிகளும், திமுக தரப்பில் அதிகபட்சம் 6 தொகுதிகளும் மட்டுமே கொடுக்க முடியும் என்று கறாராக சொல்லிவிட்டார்களாம். இரு தரப்புமே ராஜ்ய சபா சீட் பற்றி உறுதியான முடிவையும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. இவ்வளவு குறைவாக தொகுதிகளை வாங்க யோசித்தே கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் தவிக்கிறதாம் தேமுதிக.
‘இவ்வளவு தொகுதிகள்தான் கொடுக்க முடியும், இஷ்டமிருந்தால் வரட்டும். இல்லையென்றால் போகட்டும்’ என்ற மனநிலையில் திமுகவும், அதிமுகவும் உள்ளதால் கையை பிசைந்துக்கொண்டு நிற்கிறது தேமுதிக. தனித்துப் போட்டியில்லை என உறுதியாக சொல்லிவிட்டார் பிரேமலதா. எனவே இந்த இரு கூட்டணிகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது தவெக பக்கம் போக வேண்டும். ஆனால், தவெக ஆப்சனை பிரேமலதா தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
கூட்டணியே இறுதியாகாத நிலையில், விருதுநகர் அல்லது சிவகாசி தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிடுவார் என்று சொல்லி பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார் பிரேமலதா. இந்த இரு தொகுதிகளில் ஒரு முக்கிய கணக்கு உள்ளது. சிவகாசி அதிமுகவின் ராஜேந்திர பாலாஜியின் தொகுதி. எனவே விருதுநகரில் விஜயபிரபாகரன் போட்டி என்றால், தேமுதிக அதிமுக கூட்டணியில் இருக்கும். அதுவே, சிவகாசியில் அவர் போட்டியிட்டால், அக்கட்சி திமுக கூட்டணியில் இருக்கும்.
தேமுதிகவுக்கு எல்லா கட்சிகளுமே தோழமைக் கட்சிகள்தான் என்று சில நாட்களுக்கு முன்பு சொன்னார் பிரேமலதா. ஆனால், ஒரு கட்சி கூட அவர்களை தோழனாக கூட்டணியில் சேர்ந்துக்கொண்டு இதுவரை தோள் கொடுக்கவில்லை என்பதுதான் சோகம்.
