

"விஜயகாந்த், பிரேமலதா, தேமுதிக குறித்து எவரேனும் அவதூறாகப் பேசினால், அவர்களின் நாக்கு கண்டிப்பாகத் துண்டிக்கப்படும்" என அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் நடிகை விந்தியா, "தேர்தல் வந்துவிட்டால் ஒவ்வொரு கட்சியாகச் சென்று பேரம்பேசும் ‘துண்டு போட்டு அரசியல்' நடத்தும் ஒரே தலைவி பிரேமலதாதான். கடந்த முறை தேமுதிக-வுக்கு ராஜ்ய சபா சீட் கொடுத்திருந்தால்கூட இப்போது திமுக-வில் சேர்ந்திருப்பார்.
அரை சதவீத வாக்குவங்கி கூட இல்லாத தேமுதிக-வை திமுக அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. அக்கட்சிக்குக் கொள்கை என்று ஏதுமில்லை; பிரேமலதாவுக்குப் பணம், சுதீஷுக்கு சீட்" என கடுமையாக பேசியிருந்தார். இது தேமுதிக-வினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த விமர்சனங்களுக்கு, நேற்று சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் பதிலடி
கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த கூட்டத்தில் பேசிய தேமுதிக மகளிர் அணிச் செயலாளர் மாலதி வினோத், "தேமுதிக என்பது எந்தக் கட்சியையும் உடைத்து உருவானது அல்ல; அது விஜயகாந்தால் உருவாக்கப்பட்ட ஒரு சுயம்பு.
கட்சியைத் தொடங்கும் முன்பே மகளிர் அணியைத் தொடங்கிப் பெருமை சேர்த்தவர் அவர். தேமுதிக என்பது எங்கள் உயிர் மூச்சு. பிரேமலதா பற்றி கேலியாகப் பேசுவோரை இனி பொறுத்துக்கொள்ளக் கூடாது. சமூக வலைதளங்களில் யார் பேசினாலும் உடனடியாகப் பதிலடி கொடுங்கள்.
யார் மீது வழக்கு வந்தாலும் கவலைப்படாதீர்கள். நமக்கு வழக்கறிஞர் அணியும், பிரேமலதாவும் துணையாக இருக்கிறார்கள். பிரேமலதா பார்க்காத பணமா, சொத்தா? விஜயகாந்த் சம்பாதித்த பணத்தை மக்களுக்காகச் செலவிட அனுமதித்த பெருந்தன்மை கொண்டவர் அவர். இனி யாராவது அவர் பணம் வாங்கியதாகப் பேசினால், சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளை உடைப்போம், முற்றுகையிடுவோம். குறிப்பாக, விஜயகாந்த், பிரேமலதா, தேமுதிக குறித்து இனி தவறாகப் பேசினால், சம்பந்தப்பட்டவர்களின் நாக்கு துண்டிக்கப்படும்" என்றார்.