

சென்னை: குதிரை பேரம் நடந்ததாக எதிர்க்கட்சிகள் அனைவரும் குற்றம்சாட்டும் நிலையில், அது குறித்து முதல்வர் விஜய் பேச வேண்டும் என தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சட்டப்பேரவையில் பேசும்போது, “எதிர்க்கட்சிகளை எதிரிக் கட்சிகளாக நினைக்காமல் அனைவரையும் சந்தித்து ஒரு மாண்பையும், மரபையும் முதல்வர் விஜய் ஏற்படுத்தியிருக்கிறார். அதை நான் வரவேற்கிறேன்; அதேபோல முதல் அறிவிப்பிலேயே சிங்கப் பெண் படை, மதுக்கடைகளை மூடுவோம் என்று சொன்னதும் மக்களால் வரவேற்கப்பட்டது. அந்த வகையில் 717 மதுக்கடைகளை மூடியது ஒட்டுமொத்த தமிழக மக்களாலும் வரவேற்கப்பட்டது. மீனவர்கள் விவகாரம் குறித்து கடிதம் எழுதியதும் வரவேற்கத்தக்கது.
முதல்வர் பதவி ஏற்கும்போது, தனது ஆட்சி வெளிப்படையான ஆட்சியாக இருக்கும் எனச் சொன்னீர்கள். சொல்லும், செயலும் ஒன்றாக இருக்க வேண்டும். குதிரை பேரம் நடந்ததாக எதிர்க்கட்சிகள் அனைவரும் குற்றம்சாட்டுகின்றன. இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் நடந்தது இல்லை. இது குறித்து இன்று பேசவே மனவேதனை அடைகிறேன்.
யாரும் முகத்தை மூடிக்கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை என முதல்வர் விஜய் கூறியிருந்தார்; ஆனால் முதல்வரை சந்திக்க முகத்தை மூடிக்கொண்டு வந்தது யார் என பதிலளிக்க வேண்டும். குதிரை பேரம் நடந்ததாக ஏராளமானோர் கூறியிருக்கும் நிலையில் அது குறித்து முதல்வர் பேச வேண்டும்.
முதல்வரின் அரசியல் பிரிவில் ரத்தன் பண்டிட்டை நியமனம் செய்ததற்கு ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு இருக்கிறது. அவரை அரசு உயர் பதவியில் கொண்டு வந்தது ஏற்புடையதல்ல. இளைஞர்கள் நம்பிக்கையில் வாக்கு அளித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏமாற்றம் ஏற்படும்; தேவைபட்டால் முதல்வருக்கு தனிபட்ட முறையில் நியமித்துக் கொள்ளலாம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது, முதல்வர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ரத்தன் பண்டிட் நியமிக்கப்பட்ட உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.