

படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: தீபாவளி பண்டிகைக்காக, சென்னையில் இருந்து நவ.5-ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. பாண்டியன், நெல்லை உள்பட முக்கிய ரயில்களில் 5 நிமிடங்களில் 2-ம் வகுப்பு தூங்கும் பெட்டிகளில் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் காட்டியது.
நிகழாண்டில் தீபாவளி பண்டிகை வரும் நவ.8-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ரயில் டிக்கெட் முன்பதிவை பொருத்தவரை 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அந்த வகையில், பண்டிகைக்கு சில நாட்கள் முன்பாக, நவ.5-ம் தேதி அன்று சென்னையில் இருந்து விரைவு ரயில்களில் புறப்படுவதற்கு வசதியாக, டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வழியாகவும், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு நடைபெற்றது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் முக்கிய விரைவு ரயில்களில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு 5 நிமிடங்களில் முடிந்து, காத்திருப்போர் பட்டியல் காட்டியது.
சென்னையில் இருந்து, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்கு முறையே புறப்படும் பாண்டியன், நெல்லை, முத்துநகர், கன்னியாகுமரி ஆகிய ரயில்களில் விரைவு ரயில்களின் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில், டிக்கெட் முன்பதிவு 5 நிமிடங்களில் முடிந்து, காத்திருப்போர் பட்டியல் காட்டியது.
குறிப்பாக, பாண்டியன், நெல்லை உள்பட முக்கிய விரைவு ரயில்களில் காத்திருப்போர் பட்டியலும் முடிந்து, "ரெக்ரெட்" என்று வந்தது. முக்கிய ரயில்களில் ஏசி பெட்டிகளிலும் டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்தது.
இதுபோல, மலைக்கோட்டை, சேரன், நீலகிரி ஆகிய விரைவு ரயில்களிலும் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளுக்கு டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் காட்டியது. இதன்காரணமாக, டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
ஐஆர்டிசிடி இணையதளம் மூலமாக, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்ற பெரும்பாலான மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இணையதளத்தின் உள்ளேயே செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.