பழநியில் ‘வெற்றி வீடு திட்டம்’ பெயரில் தவெக வைத்த பேனர் - சர்ச்சை காரணமாக அகற்றம்

பழநியில் ‘வெற்றி வீடு திட்டம்’ பெயரில் தவெக வைத்த பேனர் - சர்ச்சை காரணமாக அகற்றம்
Updated on
1 min read

திண்டுக்கல்: தமிழக அரசின் திட்டமான ‘வெற்றி வீடு’ திட்ட முகாம் நடக்கவிருப்பதாக பழநியில் தவெகவினரால் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரால் சர்ச்சை எழுந்துள்ளது. இதனை, எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கிராமப்புறங்களில் குடிசை வீடுகளில் வசிக்கும் ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் நோக்கில் ‘வெற்றி வீடு திட்டம்’ அறிமுகப்படுத்தப்படுவதாகவும், இத்திட்டத்தின் கீழ் முதல் ஆண்டிலேயே 70,000 வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கப்படுவதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டம் அறிவிக்க மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இன்னும் நடைமுறைக்கு வராத நிலையில் பழநி அடுத்த சிவகிரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மருத்துவ நகர் பகுதியில் ‘வெற்றி வீடு திட்டம்’ வழங்கும் முகாம் நடக்கவிருப்பதாக தவெகவை சேர்ந்தவர்கள் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.

அதில், தமிழக அரசு முத்திரை, திண்டுக்கல் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான விக்னேஷ் மற்றும் கட்சியினர் சிலரது படங்களும் இடம்பெற்றுள்ளன.

ஆனால், முகாம் நடைபெறும் இடம், நாள், நேரம் எதுவும் குறிப்பிடவில்லை. இருந்தும், அரசு திட்ட முகாம் தொடர்பாக வைக்கப்பட்டுள்ள பேனர் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி வீடு திட்டம் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிடாத நிலையில் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியாமல் அரசு விழாவை தனி நபர்கள் (தவெக கட்சியினர்) எப்படி நடத்த முடியும்; அரசு முத்திரையை தனி நபர்கள் எப்படி பயன்படுத்த முடியும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும், பேனர் வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சர்ச்சையை அடுத்து, பேனர் வைத்தவர்கள் தாங்களாகவே அந்த பேனரை அகற்றினர்.

பழநியில் ‘வெற்றி வீடு திட்டம்’ பெயரில் தவெக வைத்த பேனர் - சர்ச்சை காரணமாக அகற்றம்
“பாதுகாப்பான உன்னத தமிழகத்தை உருவாக்குவோம்” - காவலர் நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in