

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு ஊழியர்களுக்கு 2025-26-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் வழங்க நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து நிதித்துறை துணை செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: மத்திய அரசின் நிதி அமைச்சக செலவினத் துறையின் உத்தரவின்படி, உற்பத்தி திறன் சாராத போனஸ் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. அதேபோன்று புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்படுகிறது.
குரூப் 'சி மற்றும் குரூப் பி'-யில் உள்ள அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்களுக்கு மார்ச் 31 அன்று பணியில் இருந்து, 2025-26-ம் ஆண்டில் குறைந்தது 6 மாதம் தொடர்ந்து பணி செய்தவர்களுக்கு, உற்பத்தி திறன் போனஸ் திட்டத்தில் வராதவர்களுக்கு மட்டும் கிடைக்கும். இதன்படி 30 நாள் போனஸ் ரூ.6,908 வழங்கப்படும்.
தற்காலிக தொழிலாளர்களுக்கு 240 நாள் வேலை செய்தவர்களுக்கு ரூ.1,184 வழங்கப்படும். இந்த உத்தரவு மத்திய துணை ராணுவ படை, ஆயுதப்படை ஊழியர்களுக்கும் பொருந்தும்.
6 மாதத்துக்கும் குறைவாக பணி செய்தவர்களுக்கு, பணி செய்த மாதங்களுக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் போனஸ் வழங்கப்படும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகை 2026-27-ம் நிதி ஆண்டின் பட்ஜெட்டில் இருந்து வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.