

கோப்புப் படம்
சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் ரொக்கம் வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் நேற்று தொடங்கியது.
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசுத்தொகுப்பு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும், தமிழகத்தில் உள்ள 2 கோடியே 22 லட்சத்து 91,730 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவற்றுக்கு, ரூ. 248 கோடியே 66 லட்சத்து 17,959 நிதி ஒதுக்கி தமிழக அரசு கடந்த டிச.31-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.
இந்நிலையில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் ரொக்கப்பரிசாக ரூ.3000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். அந்த வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ஆகியவை சேர்த்து ரூ.6,936 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 959 செலவில் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
வழக்கமாக பொங்கல் பரிசுத் தொகுப்பானது, நியாயவிலைக் கடைகளில் உள்ள குடும்ப அட்டைகள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, டோக்கன் அடிப்படையில் வழங்கப்படும். அதன்படி, இதற்கான டோக்கன் விநியோகம் நேற்று தொடங்கியது. நியாயவிலைக் கடைபணியாளர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகித்தனர். இதுதவிர, கடைகளுக்குப் பொருட்கள் வாங்க வருவோரிடமும் டோக்கன்கள் வழங்கினர். இப்பணிகளை நாளைக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை நாளை மறுநாள் (ஜன.8) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்று முதல் கடைகளில் பொதுமக்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறலாம்.