தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவை கலைப்பு

ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் உத்தரவு
தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவை கலைப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அமைக்கப்பட்ட 16-வது சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை இன்று மாலை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் முடிவுற்று, திமுக அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. 2021 மே 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். இதையடுத்து, தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவை அமைந்தது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், 16-வது சட்டப்பேரவைக்கான பதவிக்காலமும் நிறைவடைந்தது.

இதையடுத்து 17-வது சட்டப்பேரவையை அமைக்க உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான பேரவை பொதுத் தேர்தல் கடந்த ஏப்.23-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த மே 4-ம் தேதி முடிவுற்ற நிலையில், தமிழக அரசியலில் புதிய கட்சியான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்து முதலிடம் பெற்றுள்ளது. இதையடுத்து அவர் இன்று கிண்டி ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

முன்னதாக நேற்று மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார். ஆளுநரும் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டார். அத்துடன், அடுத்த ஏற்பாடு செய்யும் வரை, பணியைத் தொடர வேண்டும் என்றும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், இன்று ஆளுநரை தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு அமைக்கப்பட்ட 16-வது சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் அர்லேகர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை இன்று மாலை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவை கலைப்பு
தவெகவுடன் கைகோத்த காங்கிரஸ்: தமிழகத்தில் மாறப்போகும் அரசியல் கணக்கு!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in