

கோப்புப் படம்
ராஜபாளையம்: அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், கண்புரை மற்றும் கர்ப்பப்பை அகற்றுதல் சிகிச்சை நீக்கப்பட்டதால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக அரசு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
கடந்த திமுக ஆட்சியில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் அளவுக்கு சிகிச்சை பெறும் வகையில் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்தக் காப்பீட்டுத் திட்டம் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கென விரிவுபடுத்தப்பட்ட புதிய காப்பீட்டுத் திட்டத்தை புதிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது இத்திட்டம் ஜூலை 1 முதல் 2031 ஜூன் 30 வரை அமலில் இருக்கும்.
இத்திட்டத்தில் ஓர் அரசு ஊழியருக்கு ஆண்டுக்கு ரூ.4,500 தவணை தொகையை அவர்களது சம்பளத்தில் இருந்து மாதந்தோறும் ரூ.390 பிடித்தம் செய்து, கூடுதல் தொகையை அரசு செலுத்துகிறது.
ஓய்வூதியருக்கு ஆண்டுக்கு ரூ.7,728 தவணைத் தொகையை ஓய்வூதியத்தில் இருந்து மாதந்தோறும் ரூ.644 பிடித்தம் செய்யப்பட உள்ளது. இதில் சிகிச்சைக்கான தொகை ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி விருதுநகர் மாவட்டச் செயலாளர் செல்வகணேசன் கூறியதாவது: தமிழகத்தில் 12 லட்சம் அரசு ஊழியர்கள், 11 லட்சம் ஓய்வூதியதாரர்களிடமிருந்து காப்பீட்டுத் திட்ட மாதத் தவணைக்காக ரூ.128 கோடி அளவுக்கு ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்யப்படுகிறது.
புதிய காப்பீட்டுத் திட்டம் குறித்து ஜூன் 24-ம் தேதி நிதித்துறை வெளியிட்ட அரசாணையில், அரசு ஊழியர்களிடமிருந்து காப்பீட்டுத் திட்டத்துக்காக பிடித்தம் செய்யப்படும் பிரீமியத் தொகை ரூ.300-லிருந்து ரூ.390 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சிகிச்சை தொகை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறினாலும், எந்தெந்த சிகிச்சைக்கு எவ்வளவு தொகை என்ற விவரம் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
மேலும், கண்புரை, கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சைகள் காப்பீட்டு திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, இத்திட்டத்தில் இல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டால் திரும்ப வழங்கும் தொகை 75 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
அரசாணையில் கடந்த காலங்களில் இருந்த கட்டணமில்லா சிகிச்சை, 3 மாதங்களுக்கு ஒருமுறை காப்பீட்டு நிறுவனம் சார்பில் நடத்தப்படும் குறைதீர் கூட்டம் என்ற பதம் இடம்பெறவில்லை.
இதனால், அரசு ஊழியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகளே அதிகம் உள்ளது. கேரளாவில் உள்ளது போல் அரசே காப்பீட்டுத் திட்டத்தை கையில் எடுத்து அனைத்து மருத்துவமனைகளிலும் அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் முடிவை அறிவிக்க வேண்டும் என்றார்.