காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலால் கட்சிக்குள் குமுறலும் அதிருப்தியும் ஏன்? - ஒரு பார்வை

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலால் கட்சிக்குள் குமுறலும் அதிருப்தியும் ஏன்? - ஒரு பார்வை
Updated on
2 min read

ஆட்சி, அதிகாரத்தில் பங்குவேண்டும் என தமிழகத்தில் முதல் ஆளாக குரல் எழுப்பிக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, கடைசி கட்சியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதிலும் கூட இன்னும் ஒரு தொகுதிக்கு அவர்களால் வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை.

திமுக கூட்டணியில் உள்ளூரில் தொடங்கி டெல்லி வரை பஞ்சாயத்து வைத்து மல்லுக்கட்டி, கடந்த முறையை விட கூடுதலாக 3 தொகுதிகளைப் பெற்று 28 இடங்களை கேட்டு வாங்கியது காங்கிரஸ். கூடவே ஒரு ராஜ்யசபா சீட்டையும் திமுகவிடம் பெற்றுக்கொண்டது.

மார்ச் 4-ஆம் தேதி திமுகவிடம் இருந்து தொகுதிகளைப் பெற்றுக்கொண்ட காங்கிரஸ், ஒரு மாதத்துக்குப் பின்னர் ஏப்ரல் 3-ஆம் தேதிதான் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதிலும், மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை, கிளியூரில் ராஜேஸ், நாங்குநேரி ரூபி மனோகரன், அறந்தாங்கி ராமச்சந்திரன், வேளச்சேரி அசன் மவுலானா என 12 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், தென்காசி பழனி நாடார், குளச்​சல் தொகு​தி​யில் 3 முறை வென்ற ஜே.ஜி.பிரின்​ஸ், உதகை ஆர்​.கணேஷ், விருத்​தாச்சலம் ராதாகிருஷ்ணன், மயி​லாடு​துறை எஸ்​.​ராஜகு​மாரன் ஆகிய 5 எம்​எல்​ஏக்​களுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் மிக முக்கிய மாற்றமாக பார்க்கப்படுவது, 13 புது​முகங்​களுக்​கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதை தான். ஏனென்றால், காங்கிரஸ் கட்சியில் வழக்கமாக இருக்கும் தலைவர்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் மட்டுமே பெரும்பாலும் சீட் கிடைக்கும் என்ற பேச்சு உள்ளது. ஆனால், அதனை உடைத்து இம்முறை இளைஞர்களுக்கும், புதுமுகங்களுக்கும் அதிகம் வாய்ப்பளிக்க வேண்டும் என்று சில காங்கிரஸ் தலைவர்கள் குரலெழுப்பினர். இதற்கு ஏற்கெனவே இருக்கும் பல தலைவர்களும், முட்டுக்கட்டை போட்டதனால்தான் வேட்பாளர் பட்டியல் தாமதமே ஆனது என்றும் சொல்லப்படுகிறது.

செல்வப்பெருந்தகையால் கொடுக்கப்பட்ட பட்டியலில் ஏற்கெனவே கோலோச்சுபவர்களே அதிகம் இடம்பெற்றிருந்ததால், சில காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகவே குமுற ஆரம்பித்தனர். இதனை அறிந்த ராகுல் காந்தியும் தனது அழுத்தமான எதிர்ப்பை பதிவு செய்தார்.

அதன்பின்னரே, 50 - 50 என்ற அடிப்படையில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சொல்லுகின்றனர். இதிலும் திருப்தியில்லை என ஒரு தரப்பு சொன்னாலும், இந்த அளவுக்காவது புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்களே என்று ஏக்கப் பெருமூச்சும் காங்கிரஸிலிருந்து வெளிப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸில் இரண்டு பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதும் பெரும் அதிருப்தியாக மாறியுள்ளது. குளச்சலில் தாரகை கத்பட், சிங்காநல்லூரில் ஸ்ரீநிதி நாயுடு ஆகிய இருவர் மட்டும் காங்கிரஸின் பெண் வேட்பாளர்கள். பாஜக கூட தனது 27 வேட்பாளர்களில் 5 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கிய நிலையில், காங்கிரஸ் இருவரை மட்டுமே தேர்தலில் நிறுத்தியுள்ளது, அக்கட்சியின் மகளிரணியினர் மத்தியிலேயே கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸில் இணைந்த பாமக முன்னாள் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனுக்கு பென்னாகரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சிக்காக அரை நூற்றாண்டாக உழைத்தவர்கள் இருக்கும்போது, எதன் அடிப்படையில் 5 நாட்களுக்கு முன்பு கட்சியில் சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்குகிறீர்கள் என்றும் கதர் கட்சியினர் ஆவேசமாகின்றனர்.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை காட்டமாக விமர்சித்து வெளிப்படையாகவே அறிக்கை விட்டுள்ளார் அக்கட்சியின் எம்.பி ஜோதிமணி. அதில், ‘வேட்பாளர்கள் முன்பே முடிவு செய்யப்பட்டு, அதற்கேற்ப தொகுதிகள் கேட்டு வாங்கப்பட்டுள்ளன. 20, 30 ஆண்டுகள் பணியாற்றிய பலர் இருக்கும்போது, கட்சிக்கு வந்து சில நாட்கள், சில ஆண்டுகளே ஆன சிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள கொங்கு வெள்ளாள கவுண்டர், அருந்ததியர் சமூகங்களுக்கு முழுக்கவும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இரு பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர், சட்டப்பேரவைக் கட்சி தலைவர், பொறுப்பாளர்களுக்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தைப் பற்றிய எவ்வித அக்கறையும் இல்லை. இந்த பேரழிவைத் தடுத்து நிறுத்த நாங்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை’ என விரக்தியுடன் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

தொகுதிப் பங்கீட்டில் திமுகவுக்கு அனுசரணையாக நடந்துகொண்டார், வேட்பாளர் தேர்விலும் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிப்பதில் அக்கறை காட்டாமல் இருந்தார் என செல்வப்பெருந்தகை மீது கிளர்ச்சி காங்கிரஸ் தலைவர்கள் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

திமுக ரூட் மூலமாகவே தமிழ்க்குமரனை காங்கிரஸில் இணைத்து பென்னாகரம் சீட்டை செல்வப்பெருந்தகை உறுதி செய்தார் என்றும் காங்கிரஸுக்கும் புகைச்சல் எழுந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சூழலில்தான், தேர்தல் முடிந்ததும், தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கட்சிக்கு புத்துயிர் பாய்ச்ச வேண்டும் என்ற செயல்திட்டத்தோடு காங்கிரஸ் உயர் தலைமை உள்ளது. அதன் வெளிப்பாடாகவே பல முன்னணி தலைவர்களை புறந்தள்ளி, புதுமுகமான கிறிஸ்டோபர் திலக்கிற்கு ராஜ்யசபா சீட்டை வழங்கியது காங்கிரஸ். அதே பாணியில் எம்எல்ஏ சீட்டுகளையும் வழங்கவேண்டும் என்பதே தலைமையின் திட்டம். ஆனால், அதனை இந்த முறை செயல்படுத்த முடியாததுதான் சோகம்.

கடுமையான உள்கட்சி பிரச்சினைகளை தாண்டி திமுகவிடமிருந்து தொகுதிகளை வாங்கி, வேட்பாளர்களையும் ஒரு வழியாக அறிவித்துவிட்டது காங்கிரஸ். வேட்பாளர்களையெல்லாம் எம்எல்ஏக்களாக மாற்ற காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது என பார்ப்போம்.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலால் கட்சிக்குள் குமுறலும் அதிருப்தியும் ஏன்? - ஒரு பார்வை
அண்ணாமலைக்கு சீட் கொடுக்காமல் அதிர்ச்சி - பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in