

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் உணவுத் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நெல் கொள்முதல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஏதுவாக, உதவி மைய எண்களை தமிழகம் முழுவதும் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகங்கள், நேரடி கொள்முதல் நிலையங்கள் மற்றும் நெல் சேமிப்புக் கிடங்குகளில் அனைவரும் அறியும் வகையில் காட்சிப்படுத்த அமைச்சர் உத்தரவிட்டார்.
மேலும் விவசாயிகள் பயன்பாட்டுக்காக செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 3540, வாட்ஸ் அப் எண் 95008 02465 ஆகியவை சரியாக செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார். மேலும், தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுவரும் சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்ட அமைச்சர், பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் முடிக்க அறிவுறுத்தினார்.