பழநி - மானூர் அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு: உள்ளூரின் 2 சிறுவர்களே காரணம் என போலீஸ் தகவல்

திண்டுக்கல் எஸ்.பி. ஜெயக்குமார் விளக்கம்
பழநி - மானூர் அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு: உள்ளூரின் 2 சிறுவர்களே காரணம் என போலீஸ் தகவல்
Updated on: 
2 min read

பழனி: “பழநி அருகே மானூரில் உள்ள அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கிடந்த சம்பவத்துக்கு அதே பகுதியைச் சேர்ந்த 2 சிறுவர்கள் தான் காரணம்” என திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், பழநியை அடுத்துள்ள மானூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. காலாண்டு விடுமுறை முடிந்து அக்.5-ஆம் தேதி மீண்டும் பள்ளி திறந்தபோது, அங்குள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் போல் ஏதோ கிடப்பதை பார்த்த பணியாளர்கள், இது குறித்து தலைமையாசிரியர் ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, உடனே அவர் பணியாளர்களை வைத்து குடிநீர் தொட்டியை சுத்தம் செய்தார்.

இரண்டு நாட்களுக்கு பிறகு இந்தச் சம்பவம் அக்.7-ஆம் தேதி மாணவர்களின் பெற்றோர், கிராமத்தினருக்கு தெரிய வந்தது. இந்தச் சம்பவத்தை பள்ளி நிர்வாகம் மூடி மறைத்ததாக கூறி, பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்றும் பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், இந்த சம்பவத்துக்கு காரணமாவர்களை கைது செய்யக் கோரியும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வக்குமார் தலைமையில் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், பெற்றோர்கள், கிராமத்தினருடன் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனிடையே, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, இந்தச் சம்பவத்துக்கு காரணமான அடையாளம் தெரியாத நபர் மீது கீரனூர் போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்கு அதே பகுதியைச் சேர்ந்த 2 சிறுவர்கள்தான் காரணம் என தெரியவந்துள்ளது என காவல் துறை தரப்பு தெரிவித்துள்ளது. இது, அந்தக் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, பழநியில் செய்தியாளர்களிடம் திண்டுக்கல் எஸ்.பி.ஜெயக்குமார் கூறியது: “குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கிடந்த சம்பவம் தொடர்பாக 40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், இந்தச் சம்பவத்துக்கு அதே பகுதியைச் சேர்ந்த 2 சிறுவர்கள்தான் காரணம் என தெரியவந்தது.

காலாண்டு விடுமுறை நாளில் பள்ளி வளாகத்தில் கபடி விளையாடிய சிறுவர்களில் ஒருவர் மலம் கழித்துள்ளார். அதனை, மற்றொரு சிறுவன் எடுத்து குடிநீர் தொட்டியில் போட்டுள்ளார். இதனை விளையாட்டுத்தனமாக செய்ததாகவும், எந்த உள்நோக்கத்திலும் செய்யவில்லை எனவும் தெரிந்தது.

அந்த இரு மாணவர்களுக்கும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் நற்பண்புகள் குறித்து கவுன்சிலிங் அளிக்கப்பட உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

தலைமையாசிரியருக்கு நோட்டீஸ்:

கல்வித் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் ஜெயக்குமார் அளித்த விளக்கம் முரண்பாடாக இருந்ததோடு, குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கிடந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல், இந்த சம்பவத்தை மூடி மறைக்கும் விதமாக தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

இதன் காரணமாக, தலைமையாசிரியரிடம் விளக்கம் கேட்டு திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் (17A) வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

பழநி - மானூர் அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு: உள்ளூரின் 2 சிறுவர்களே காரணம் என போலீஸ் தகவல்
அரசுப் பள்ளிகளின் குடிநீர், பாதுகாப்பு வசதிகளை அவசர ஆய்வுக்கு உட்படுத்துக: தவாக

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in