

திண்டுக்கல்: “இன்னும் ஒன்றரை அமாவாசை முடிந்து பவுர்ணமி வருவதற்குள், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். ஸ்டாலின் சொல்வதுபோல், அது டெல்லி ஆட்சியாக இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும். மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசைத் தானே நாட வேண்டும்” என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.
திண்டுக்கல் எம்விஎம் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் கல்லூரி வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அவர்களுடன் பேசுகையில், “போராடும் சகோதரிகள் மோடிக்காக எங்களுக்கு ஓட்டுப் போடவேண்டாம் எனக் கூறி விடாதீர்கள்” என்றார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் அடிப்படை வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்துக்கு அதிமுக சார்பிலும், அடுத்து முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பாஜக கூட்டணி சார்பில் ஆதரவு தெரிவிக்க இங்கு வந்துள்ளேன்.
கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைக்கு அரசு இன்றுவரை செவி சாய்க்கவில்லை. ஒன்றரை அமாவாசை முடிந்து பவுர்ணமி வருவதற்குள் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். இவர்களின் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என எடப்பாடி பழனிசாமி சார்பில் கூறிக்கொள்கிறேன்.
நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு தற்போது ‘உங்களது கனவு என்னவென்று கூறுங்கள்’ என மக்களிடம் கேட்கின்றனர். திமுக ஆட்சி வீட்டுக்குப் போக வேண்டும் என்பது தான் கனவு என மக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
அரசு ஊழியர்கள் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர். ஜாக்டோ ஜியோவை வைத்து தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக் கொண்டனர். திமுக மீது நம்பிக்கை இல்லாமல் தான் சகோதரிகள் போராடி வருகின்றனர்.
தமிழகத்தில் திமுகவை தவிர யார் ஆட்சி அமைத்தாலும் அது டெல்லி ஆட்சி என ஸ்டாலின் கூறுகிறார். டெல்லி ஆட்சியாக இருந்தாலும் இருந்துவிட்டு போகட்டும். ரயில் நிலையம் மற்றும் 10 ரயில்கள் வேண்டுமென்றால் டெல்லியில் தான் கேட்க வேண்டும். மத்திய அரசாங்கத்திடம் தான் மாநில அரசாங்கம் கேட்கவேண்டும்.
திமுகவுக்கு எதிராக உள்ள அனைவரையும் கூப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள் தவறு இல்லை. திமுக ஆட்சி எதையும் செய்ய லாயக்கில்லாத ஆட்சி” என்றார்.