

பழநி: பழநி ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைக்க ‘டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர்’ வசதி இன்று (செப்.1) முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி ரயில் நிலையத்துக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், ரயில் நிலையத்தை தரம் உயர்த்தவும் முடிவு செய்து, பழநி ரயில் நிலையத்தில் ரூ.14 கோடி செலவில் ‘அம்ரித் பாரத்’ ரயில் நிலைய திட்டத்தில் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, பயணிகள் தங்களின் உடைமைகளை போகும் இடங்களுக்கு எல்லாம் தூக்கிச் செல்வதை தவிர்க்கவும், ஒரு ரயிலில் இறங்கி மற்றொரு ரயிலில் செல்லும் இடைப்பட்ட நேரத்தில் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்து விட்டு வெளியே சென்று வர வசதியாக ‘டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர்’ வசதி இன்று (செப்.1) செவ்வாய்க்கிழமை காலை முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அதனை, ரயில்வே வணிக பிரிவு ஆய்வாளர் அசோக் ராஜ், கண்காணிப்பாளர் சுனில் ராம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பயணிகள் தங்களது செல்போனில் டிஜிட்டல் லாக்கரில் உள்ள ‘க்யூ ஆர் குறியீட்டை’ ஸ்கேன் செய்ய வேண்டும். நடுத்தரம், பெரியது, மிகப்பெரியது என 3 வகைகளில் லாக்கர் அறை வசதி செய்யப்பட்டுள்ளது.
அதில், தேவையான லாக்கரை தேர்வு செய்து, ஜிபே, ஃபோன் பே மூலம் கட்டணத்தை செலுத்த வேண்டும். உடனே, லாக்கர் எண்ணுடன் ரகசிய எண் (ஓடிபி) கிடைக்கும். இதை பயன்படுத்தி, லாக்கர் அறையில் உடைமைகளை வைத்து விட்டு, திரும்பி வந்து எடுத்துக் கொள்ள முடியும். லாக்கர் பெட்டிகள் மற்றும் வைக்கும் நேரத்தை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும்.
அதிகபட்சம் 2 நாட்கள் வரை உடைமைகளை வைத்து செல்லலாம். இந்த லாக்கர் மனிதர்கள் உழைப்பு மற்றும் கண்காணிப்பு இல்லாமல் 24 மணி நேரமும் 2 சிசிடிவி கண்காணிப்பு கேமரா மூலம் இயங்கும். “இந்த லாக்கரை நிர்வகிக்கும் பொறுப்பு தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது” என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.