

சென்னை: வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனையில், செரிமானக் கோளாறுகள் தொடர்பான இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் சார்ந்த அனைத்து நோய்களுக்கும் ஒரே இடத்தில் தீர்வு வழங்கும் வகையில், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய `செரிமான மண்டல அறிவியல் மையம்' தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பிரத்யேக சிகிச்சைப் பிரிவை காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மருத்துவர்அரவிந்தன் செல்வராஜ் மற்றும் இம்மையத்தின் இயக்குநர் பாண்டுரங்கன் பாசுமணி ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.
அப்போது மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில், ``நிஜ உலக சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் சுகாதார சவால்களுக்கு தீர்வு வழங்கும் நோக்கத்தோடு, சிறப்பு சிகிச்சை மையங்களையும், பிரிவுகளையும் உருவாக்குவதை காவேரி மருத்துவமனை குழுமம் தொடர்ந்து செய்து வருகிறது.
அந்த வகையில் செரிமான கோளாறுகளுடன் வாழும் நோயாளிகளின் சிகிச்சை தரத்தையும், வாழ்க்கை முறையையும் மேம்படுத்த இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
பின்னர் மருத்துவர் பாண்டுரங்கன் பாசுமணி கூறியதாவது: வாழ்வியல் மாற்றங்களால் செரிமானப் பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இரவு நேரத்தில் தாமதமாக உண்பது, போதிய தூக்கமின்மை, உடல் பருமன் மற்றும் முறையான உடற்பயிற்சி இல்லாதது போன்ற காரணங்களால் ஏற்படும் அசிடிட்டி மற்றும் நெஞ்சு எரிச்சல் ஆகியவற்றால் செரிமானக் கோளாறுகள் தொடர்ந்து பரவலாக இருக்கின்றன.
வழக்கமான நடைமுறையில் நோயாளிகள் ஒவ்வொரு துறை மருத்துவரை தேடிச் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இங்கு நோயாளிகளுக்காக பல்வேறு துறை நிபுணர்கள் ஒன்று கூடி ஆலோசித்து, ஒருங்கிணைந்த தீர்வை வழங்குவார்கள்.
சாதாரண செரிமானக் கோளாறு முதல் புற்றுநோய் பாதிப்பு வரை அனைத்துக்கும் இந்த மையம் ஒரு தீர்வாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் காவேரி மருத்துவமனையின் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் சதீஷ்குமார் ஆனந்தன், இரைப்பை குடலியல் மருத்துவர்கள் எம்.ஏ.அரவிந்த், டி.கே.ஆனந்த், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்வாதி ராஜூ, மருத்துவ இயக்குநர் ஐயப்பன் பொன்னுசாமி, ஊடுருவல் எண்டோஸ்கோபி நிபுணர் டி.தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.