திண்டுக்கல்: அழுகிய 170 டன் வெங்காயத்தை அழிப்பதில் சிக்கல்!

திணறும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள்
திண்டுக்கல்: அழுகிய 170 டன் வெங்காயத்தை அழிப்பதில் சிக்கல்!
Updated on: 
2 min read

திண்டுக்கல்: சில தினங்களுக்கு முன்பு, திண்டுக்கல்லில் உணவுப் பாதுகாப்புத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 170 டன் அழுகிய நிலையில் உள்ள வெங்காயத்தை அழிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

வெங்காயம் விலை உயர்வு காரணமாக, தமிழக அரசு வடமாநிலங்களில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்து கூட்டுறவு மூலம் மக்களுக்கு விற்பனை செய்ய சென்னைக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டது. இதில் மூன்றாம் கட்டமாக சென்னைக்கு 400 டன் வெங்காயம் ரயிலில் வந்து சேர்ந்தது.

இவற்றை பரிசோதித்த கூட்டுறவு அதிகாரிகள், வெங்காயம் தரமில்லாமல் இருந்ததால் வாங்க மறுத்தனர். இதையடுத்து, வடமாநிலங்களில் இருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்து அனுப்பிய நாஃபெட் (தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு) நிறுவனம் வெங்காயங்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி, அவற்றை இ-டெண்டர் மூலம் விற்க முயன்றது.

இந்த வகையில், திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டுக்கு 4 லாரிகளில் 200 டன் வெங்காயம் கொண்டுவரப்பட்டு கடைகளில் இருப்பு வைக்கப்பட்டது. தரமில்லாத வெங்காயத்தை வாங்க ஆள் இல்லாததால், நாட்கள் செல்லச் செல்ல வெங்காயம் அழுக தொடங்கியது. இதனால், அழுகிய வெங்காயத்தை மிகக்குறைந்த விலையாக கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்து வங்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் செல்வராஜ், வட்டார அலுவலர் செல்வம் ஆகியோர் வெங்காய மார்க்கெட்டுக்கு சென்று அழுகிய வெங்காயத்தை விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும், ஒரு கடைக்கு ரூ.30 ஆயிரம் வீதம் 3 கடைகளுக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்தனர். கடைக்கு பூட்டுப் போட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், வெங்காயத்தை அழிக்கப்போவதாக தெரிவித்தனர்.

ஆனால், அழுகிய வெங்காயங்களை எங்கு கொண்டுசென்று கொட்டுவது என சிக்கல் எழுந்தது. 100 கிலோவுக்கு மேல் அழுகிய வெங்காயங்கள் மினிலாரியில் ஏற்றப்பட்டு, திண்டுக்கல் அருகே குரும்பபட்டி ஊராட்சி பகுதியில் உள்ள பொன்னர் சங்கர் கோயில் குட்டை பகுதியில் கொட்டியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், கடைகளிலேயே அழுகிய வெங்காயம் தொடர்ந்து இருந்து வருகிறது. அழுகிய நிலையில் உள்ள வெங்காயத்தால் துர்நாற்றம் ஏற்பட்டு, தலைவலி வருவதாக அருகில் உள்ள கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அபராதத்தை செலுத்த மறுத்து, வெங்காயத்தை உணவுப் பாதுகாப்புத் துறை அப்புறப்படுத்தினால் அதற்கான தொகையையும் தரவேண்டும் என, நாஃபெட் நிறுவனம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அழுகிய வெங்காயத்தை அப்புறப்படுத்த முடியாமல், உணவுப் பாதுகாப்புத் துறையினர் திணறி வருகின்றனர்.

இந்த விவகாரத்தை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கொண்டுசென்று பேசித் தீர்க்க, திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர். அதுவரை அழுகிய வெங்காயம் கடைகளில் பாதுகாக்கப்பட உள்ளது.

திண்டுக்கல்: அழுகிய 170 டன் வெங்காயத்தை அழிப்பதில் சிக்கல்!
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார்

X