

கோவை: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனப்பகுதியில் காலில் இரும்பு கம்பி சிக்கி நடக்க முடியாமல் அவதிப்பட்ட பெண் காட்டு யானைக்கு உரிய சிகிச்சையளித்து பாதுகாப்பாக காட்டுக்குள் விடுவித்த வனத்துறையினர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனத்துறையினர் கடந்த செப்.2-ம் தேதி சிறுமுகை வனப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெண் யானை ஒன்றின் இடது முன்னங்காலில் சிக்கிய இரும்பு கம்பியால் காயம்பட்டு தவித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
முதன்மை தலைமை வன உயிரின காப்பாளர் உத்தரவின்படி, மாவட்ட வன அலுவலர் தலைமையில், சிறுமுகை வனச்சரக அலுவலர் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் ஆகியோர் முன்னிலையில் ஆனைமலை, சத்தியமங்கலம் ஆகிய புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த ஐந்து வன கால்நடை மருத்துவர்கள் குழுவின் மூலம் வனப்பணியாளர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதனை தொடர்ந்து இன்று அதிகாலையில் பெண் யானையை, வனப்பகுதியிலேயே மயக்க மருந்து ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு காலில் காயம் பட்ட இடத்தில் மருந்துகள் வைத்து நல்ல முறையில் வனப்பகுதியில் விடப்பட்டது. சிறுமுகை வனப்பகுதியில் சிகிச்சை அளிக்கப்பட்ட பெண் காட்டு யானையின் நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.