

சென்னை: 125 நாட்கள் வேலை வழங்கும் வி.பி.ஜி ராம் ஜி புதிய சட்டத்தை திரும்ப பெறக் கோரி, தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் ஜூலை 1ல் கருப்புக் கொடி ஏந்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து, சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், மாநில பொதுச்செயலாளர் பா.ஜான்சி ராணி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: அண்மையில், எங்கள் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் ஒன்றாக, மாற்றுத்திறனாளிகள் உட்பட கிராமப்புற விவசாய கூலித் தொழிலாளர்கள் பயன்பெற்று வந்த “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்துக்குப்” பதிலாக ஜூலை 1 முதல் விபி ஜி ராம் ஜி என்ற புதிய சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்க திட்டமிட்டுள்ளதை கண்டித்தும், இந்த புதிய சட்டத்தை உடனே திரும்பப் பெற கோரியும், தற்போது நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி பெயரிலான தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தையே தொடர்ந்து அமல்படுத்த வலியுறுத்தியும், புதிய சட்டம் அமலுக்கு வரும் ஜூலை 1ம் தேதியை கருப்பு தினமாக அனுசரித்து, கருப்புக் கொடி ஏந்தி தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் கடந்த பல மாதங்களாக உதவித்தொகை கிடைக்காமல் காத்திருக்கின்றனர். மாற்றுத் திறனாளிகளை போராட்டத்துக்கு இட்டுச் செல்லாமல் அவர்கள் அனைவருக்கும் உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.