பரிதவிக்கும் பக்தர்கள் கூட்டம்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அலட்சியமா? | ஸ்பாட் விசிட்

வெயிலில் முருகனை தரிசிக்க வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.

வெயிலில் முருகனை தரிசிக்க வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.

Updated on
3 min read

திருச்செந்தூர்: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கடற்கரையோரம் அமைந்துள்ள ஸ்தலம் ஆகும். இந்தக் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, முருகனை வழிபடுவது வழக்கம். திருவிழா காலங்கள், விசேஷ நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரிக்கும்.

இந்தச் சூழலில் தமிழகத்தில் பள்ளிகளுக்கு தற்போது அரையாண்டு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறை காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும், சபரிமலை மற்றும் மருவத்தூர் சென்று வரும் பக்தர்களும் இந்த கோயிலுக்கு இப்பொது அதிகம் வருகின்றனர். வெள்ளிக்கிழமை (டிச.26) அன்று பக்தர்கள், முருகனை தரிசிக்க சராசரியாக சுமார் 5 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டி இருந்தது. இந்த காத்திருப்பின்போது பக்தர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டனர். கட்டணமில்லா பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம், மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக தரிசன வரிசை என அனைத்து இடங்களிலும் இந்த நிலை நீடித்தது.

பக்தர்கள் கடும் அவதி: கடந்த ஜூலை மாதம்தான் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இருப்பினும் கோயிலை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் பக்தர்களின் வசதிக்காக கட்டிடங்கள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில்தான் தொடர் விடுமுறை காரணமாக அண்மையில் இந்தக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. தரிசனத்துக்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களை ஒழுங்குப்படுத்தி அனுமதிக்கும் வகையில் பிரத்யேக வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதை பொது தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசன வரிசையில் கவனிக்க முடிந்தது.

இதில் ரூ.100 கட்டண தரிசன வரிசையில் முருகனை விரைந்து தரிசிக்கலாம் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் அதிகம் குவிந்தனர். தற்போது பொது தரிசனத்துக்கு மக்கள் அனுமதிக்கப்படும் இடத்துக்கு நேர் எதிரில் இருந்து ரூ.100 கட்டண தரிசனத்துக்கான வரிசை தொடங்குகிறது. அனைத்து பக்தர்களையும் ஒரே இடத்தில் காத்திருக்க வைத்து, பின்னர் அவர்கள் அடுத்த இடத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த மாற்றத்தின் போது பக்தர்கள் வெயிலிலும் நிற்க வேண்டி உள்ளது. அங்கிருந்து ரூ.100 கட்டணம் செலுத்தும் கவுன்டருக்கு செல்ல சுமார் ஒன்றரை மணி நேரம் வரை ஆகிறது. கட்டணம் செலுத்திய பிறகு அதை தனியார் காவலாளி சரிபார்க்கிறார். இதன் பின்னர் பக்தர்கள் இளைப்பாற அமரும் வகையிலான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின்விசிறிகளும் இங்கு உள்ளன.

இங்கு பக்தர்களுக்கு நாம் சென்றிருந்த போது கடலை சுண்டல் வழங்கினர். அதை சாப்பிட்ட பின் வரிசைக்கு இடது புறம் உள்ள இடத்தில் தூக்கி வீசுகின்றனர். அங்கு சுமார் 2 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அப்போது அதை சுத்தம் செய்ய எந்தவொரு பணியாளரும் வரவில்லை. பக்தர்கள் அமருவதற்காக போடப்பட்டிருந்த நாற்காலி ஒன்றின் கீழ் நாய் ஒன்றும் படுத்திருந்தது. மறுபக்கம் கூட்டத்தை முறைப்படுத்த வேண்டிய காவலர்கள் நாற்காலியில் அமர்ந்திருந்தனர். அவர்கள் மறந்தும் கூட பக்தர்களை கண்டுகொள்ளவில்லை. இங்கு பக்தர்களின் வரிசை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என அதிகரித்து கடைசியில் ஒரே வரிசையாக செல்கிறது. இதனால் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்தி செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

குழந்தைகளுடன் வந்த பக்தர்களின் நிலை மிகவும் கடினமாக இருந்தது. இந்த இடத்தில் நாம் கவனித்த வரை தண்ணீர் மற்றும் கழிவறை வசதி இல்லை. அதே நேரத்தில் 1 லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.20 என தனிநபர்கள் ஜரூராக விற்பனை செய்கின்றனர்.

மேலும், ஒரே ஒரு இடத்தில் மட்டும் 20 லிட்டர் கேன்களில் குடிநீர் அடைக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு கேனாக அது காலியாக காலியாக அதை மாற்றுவதற்கு மட்டும் ஒருவர் இருந்தார். (இந்த 20 லிட்டர் குடிநீர் கேன் வசதி ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டிய கவுண்டருக்கு வெளியில் உள்ளது. இதற்கு கட்டணம் இல்லை).

இந்த வரிசையை கடந்து கோயின் உட்புறம் சென்றதும் சுமார் 2 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. அங்கும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏதும் இல்லை. மணிக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்களின் கூட்டத்தை கோயில் நிர்வாகம் கட்டுப்படுத்த தவறியதா அல்லது கண்டுகொள்ளாமல் தவிர்த்ததா என்ற கேள்வி அங்கிருந்த ஒவ்வொரு பக்தர்களுக்குள்ளும் எழுந்தது. இதற்கு முறையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

<div class="paragraphs"><p>பக்தர்கள் காத்திருக்கும் இடத்தில் நாற்காலிக்கு கீழ் படுத்துள்ள நாய். </p></div>

பக்தர்கள் காத்திருக்கும் இடத்தில் நாற்காலிக்கு கீழ் படுத்துள்ள நாய்.

தீர்வு என்ன? - திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அதிகாலை நடை திறந்தது முதல் இரவு நடை அடைக்கப்படும் வரை பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இருப்பினும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. இதற்கு தீர்வாக தரிசனத்துக்காக வரும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டுமென என கோயில் நிர்வாகம் தெரிவிக்கலாம். இதன் மூலம் கூட்டத்தை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் முடியும். இதில் பக்தர்கள் இந்த நேரத்தில், இந்த நாளில் தரிசிக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடலாம்.

மேலும், ஆன்லைனில் முன்பதிவு செய்ய தவறும் பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் மாதிரியான அம்சத்தை அறிவிக்கலாம். அதுவும் ஒருநாளைக்கு இத்தனை பேர்தான் என தெரிவிக்கலாம். இதன் மூலம் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தலாம். அது கடவுள் முருகனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கும் மனதிருப்தியை அளிக்கும். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் என்று மட்டுமல்லாது தமிழகத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும் முக்கிய கோயில்களில் தரிசனத்துக்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்யலாம். அது பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் பக்தர்கள் கருதுகின்றனர்.

<div class="paragraphs"><p>வெயிலில் முருகனை தரிசிக்க வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.</p></div>
‘‘பணமதிப்பிழப்பு போல ‘விபி ஜி ராம் ஜி’ சட்டமும் பேரழிவை ஏற்படுத்தும்’’ - ராகுல் காந்தி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in