‘‘பணமதிப்பிழப்பு போல ‘விபி ஜி ராம் ஜி’ சட்டமும் பேரழிவை ஏற்படுத்தும்’’ - ராகுல் காந்தி

Rahul Gandhi on VB G RAM-G Act
Updated on
2 min read

புதுடெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் போலவே விபி ஜி ராம் ஜி சட்டமும் மாநிலங்களுக்கும் ஏழைகளுக்கும் பேரழிவை ஏற்படுத்தும் என்று ராகுல் காந்தி எச்சரித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் புதுடெல்லியில் இன்று (டிச.27) கூடியது. கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் மல்லிகார்ஜுன கார்கேவும் ராகுல் காந்தியும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை ரத்து செய்யும் முடிவை, அமைசசரவையுடன் ஆலோசிக்காமல் பிரதமர் மோடி தன்னிச்சையாக எடுத்துள்ளார். எப்படி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தன்னிச்சையாக எடுத்தாரோ அப்படியே இந்த நடவடிக்கையையும் அவர் எடுத்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை எவ்வாறு ஏழைகளை கடுமையாக பாதித்ததோ அவ்வாறே இந்த முடிவும் ஏழைகளை கடுமையாக பாதிக்கும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் ரத்து என்பது மாநில அரசுகளுக்கு எதிரான தாக்குதல். ஏனெனில், மாநிலத்துக்குச் சொந்தமான பணத்தையும், மாநிலத்துக்குச் சொந்தமான முடிவெடுக்கும் அதிகாரத்தையும் மிக எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ், மாநிலங்களில் உள்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே, இது மாநிலங்கள் மீதும் இந்த நாட்டின் ஏழை மக்கள் மீதும் நடத்தப்பட்ட ஒரு பேரழிவுத் தாக்குதல்’’ என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

முன்னதாகப் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, ‘‘இன்றைய கூட்டத்தில் நாங்கள் அனைவரும் ஓர் உறுதிமொழியை ஏற்றோம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான பிரச்சாரத்தை நாடு முழுவதும் மேற்கொள்வது என்றும், இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவது என்றும் முடிவு செய்துள்ளோம். இதற்கான பிரச்சாரம் ஜனவரி 5-ம் தேதி தொடங்கப்படும். காங்கிரஸ் கட்சி இந்த இயக்கத்தை வழிநடத்தும்.

எந்த விலை கொடுத்தாவது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை நாங்கள் பாதுகாப்போம். இது வெறும் திட்டமல்ல, இந்திய அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வேலை செய்வதற்கான உரிமை. இந்தத் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கும் சதி திட்டத்தை ஜனநாயக ரீதியாக எதிர்ப்போம் என்றும் நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம்’’ என தெரிவித்தார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு விபி ஜி ராம் ஜி எனும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் வழங்கினார்.

இந்த புதிய சட்டத்தில், வேலை நாட்கள் 125 ஆக உயர்த்தப்படும், இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளும், இந்த புதிய சட்டத்தின் மூலம் அதிகபட்சம் இரண்டு மாதங்கள் வரை தொடர்ந்து வேலை வழங்காமல் நிறுத்தி வைக்க முடியும், ஆண்டுக்கு 125 நாள் வேலையை கட்டாயமாக வழங்க வேண்டும், வேலைக்கான ஊதியத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கொடுக்காவிட்டால் அதற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

Rahul Gandhi on VB G RAM-G Act
“100 நாள் வேலை திட்ட பிரச்சினையில் நாடு தழுவிய இயக்கம் தேவை” - காங். செயற்குழுவில் கார்கே பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in