

ஓசூர்: ஓசூர், ‘அரசியல் சென்டிமென்டால்’ திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வி அடைந்ததாக கிருஷ்ணகிரி மாவட்ட திமுக நிர்வாகிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஓசூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தலில் தோல்வி அடைவார்கள் என்பது கிருஷ்ணகிரி மாவட்ட அரசியல் கட்சிகளிடையே அரசியல் சென்டிமென்டாக கருதப்படுகிறது. இதனால், தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் பெரும்பாலும் ஓசூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது வழக்கம்.
நடந்து முடிந்த தேர்தலில் துணை முதல்வர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் ஓசூரில் தேர்தல் பிரச்சாரத்தை தவிர்த்து, கிருஷ்ணகிரியில் பிரச்சாரம் செய்தனர்.
அதேபோல கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமார் தளி, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த நிலையில், ஓசூர் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதை தவிர்த்தார்.
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, சூளகிரி அருகே காமன்தொட்டியில் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், திடீரென அவரது பிரச்சாரத்தில் மாற்றம் செய்யப்பட்டு ஓசூர் அந்திவாடியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போதே திமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், தேர்தல் முடிவு நேற்று வெளியான நிலையில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஸ்டாலின் தோல்வி அடைந்தார். இது திமுக தொண்டர்கள் மத்தியி்ல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூரில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ததே தோல்விக்கு காரணம் என திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
இதுதொடர்பாக ஓசூர் பகுதியைச் சேர்ந்த அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறியதாவது: ஓசூரில் அத்வானி, ராஜீவ்காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் அரசியல் வாழ்க்கையில் நீடிக்கவில்லை.
இது ஓசூர் அரசியல் சென்டிமென்டாக கருதபட்டதால், கடந்த சட்டப்பேரவை 2021 தேர்தலின்போது, திமுக தலைவர் ஸ்டாலின் ஓசூரில் பிரச்சாரம் செய்யத் திட்டமிடப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் சூளகிரியில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். அந்த தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஓசூரில் பிரச்சாரம் செய்தார்.
ஆனால், அவரால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. கடந்த மக்களவை தேர்தலின்போது அரசியல் கட்சி தலைவர்கள் ஓசூரில் பிரச்சாரத்தை முற்றிலும் தவிர்த்தனர். தற்போதைய தேர்தலின்போதும் அரசியல் கட்சியினர் ஓசூரில் பிரச்சாரத்தை தவிர்த்தனர்.
ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓசூரில் அந்திவாடி மைதானத்தில் பிரச்சாரம் செய்த நிலையில் அவரது தோல்விக்கு ஓசூர் அரசியல் சென்டிமென்ட் காரணம் என பலரும் கூறி வருகின்றனர். அது அரசியல் வதந்தியாக கருத்தப்பட்டாலும், அதன் தாக்கம் இருப்பது தற்போது பேசுபொருளாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக ஆன்மிகவாதிகள் சிலர் கூறும்போது, “இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் பிரம்மா, விஷ்ணு, சிவன் கோயில்கள் ஒரே நேர்க்கோட்டில் ஓசூர் மலை மீது உள்ளன. இதன் தாக்கம் அரசியல் தலைவர்களுக்கு ஆகாது எனப் பலர் கூறுகின்றனர். தஞ்சை பெரிய கோயிலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் செல்ல மாட்டார்கள்.
அதேபோல, கொல்லி மலையில் உள்ள வல்வில் ஓரி சிலைக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் மாலை அணிவிக்க மாட்டார்கள். அதேபோல தான், அரசியல் கட்சித் தலைவர்கள் ஓசூரில் பிரச்சாரம் செய்வதைத் தவிர்த்து வருகிறார்கள்” என்றனர்.